நாகர்கோவிலில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நாகர்கோவில்:
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள்
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடியில் காஜா முகைதீன் (வயது34) என்பவரது வீட்டுக்கு டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். அப்போது காஜா முகைதீன் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.
3 மணிநேரம் விசாரணை
இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 பேர் நேற்று காலையில் நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் இசங்கன்விளையில் உள்ள காஜா முகைதீன் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் இருந்த காஜா முகைதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 12 மணி வரை 3 மணி நேரம் நடந்தது.
அப்போது பல்வேறு கேள்விகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டனர். அதற்கு காஜா முகைதீன் பதில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது செல்போனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு என்.ஐ.ஏ. அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இசங்கன்விளையில் காஜா முகைதீன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.