துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான 3 பேரை சென்னைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான 3 பேரை சென்னைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x

சேலத்தில் துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான என்ஜினீயர் உள்பட 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் 20-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 25), எருமாபாளையத்தை சேர்ந்த பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி (25) என்பதும், அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் 2 துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் செட்டிச்சாவடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு துப்பாக்கி தயாரிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

சிறப்பு கோர்ட்டு

அங்கு துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் யூ-டியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறினர். இதையடுத்து சஞ்சய்பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த சேலம் அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் ஆகிய 3 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். துப்பாக்கி தயாரித்தல் வழக்கு என்பதால் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேசிய புலனாய்வு சம்பந்தப்பட்ட வழக்குகளை சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இதனால் இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலம் சிறையில் உள்ள சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி, கபிலன் ஆகிய 3 பேரையும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சேலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்தனர்.


Next Story