நிலக்கோட்டை தனியார் பள்ளியில்மது குடித்து பிறந்தநாள் கொண்டாட்டம்;7 மாணவிகள் சஸ்பெண்டு:விரக்தியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி


நிலக்கோட்டை தனியார் பள்ளியில்மது குடித்து பிறந்தநாள் கொண்டாட்டம்;7 மாணவிகள் சஸ்பெண்டு:விரக்தியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை தனியார் பள்ளியில் மது குடித்து பிறந்தநாள் கொண்டாடிய 7 மாணவிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதில் விரக்தியடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திண்டுக்கல்

தமிழ் கலாசாரம்

தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டை பார்த்து உலகமே வியந்தது. பல வெளிநாட்டினர் நமது கலாசாரத்தை தற்போது பின்பற்ற தொடங்கியுள்ளனர். மேற்கத்திய கலாசாரத்தில் மதுபான விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதில் வயது வித்தியாசமின்றி அந்நாட்டு மக்கள் கலந்துகொள்வார்கள்.

தற்போது இதே கலாசாரத்திற்கு தமிழக இளைய சமுதாயத்தினரும் மாறி வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. முன்பெல்லாம் திருமணம், கோவில் திருவிழா, பண்டிகை நாட்களில் தான் மது அருந்தும் பழக்கம் பலருக்கு இருந்தது. அதுவும் வயதில் மூத்தவர்கள் மட்டுமே மதுபானம் குடித்தனர். ஆனால் தற்போது நிலைமையே வேறு. பள்ளி மாணவ-மாணவிகள் கூட சர்வ சாதாரணமாக மதுபான விருந்தில் பங்கேற்று அதனை ருசி பாா்த்து வருகின்றனர்.

மயக்கம்

மாணவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று எந்த பதற்றமும் இன்றி மதுபானம் வாங்கி வருவதை நாம் பார்க்க முடிகிறது. புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுபாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் தான் இன்றைய மாணவர்கள் பிடிக்கின்றனர் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இதற்கிடையே நேற்று முன்தினம் காஞ்சீபுரத்தில் ஜூஸ் என நினைத்து மதுவை குடித்த 2 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது குடித்ததால் விரக்தியடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த மாதம் 16-ந்தேதி பிறந்தநாள் ஆகும். இதனால் மாணவியின் பிறந்தநாளை சக மாணவிகள் கொண்டாட முடிவு செய்தனர்.

அப்போது அவர்கள் ஆண்களை போல் தாங்களும் பீர் உள்ளிட்ட மதுபானத்தை வாங்கி பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாட விரும்பினர். இதற்காக பீர் பாட்டில்கள், ஜூஸ், கேக், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கினர். பின்னர் அதனை யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கு மாணவிகள் எடுத்து சென்றனர். இதையடுத்து மதிய உணவு இடைவேளையின்போது வகுப்பறையில் யாரும் இல்லாதபோது மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.

சஸ்பெண்டு

இதில் பிறந்தநாள் மாணவி உள்பட 7 மாணவிகள் பங்கேற்று ஆட்டம், பாட்டத்துடன் கேக் வெட்டி விழா நடந்தது. அப்போது மாணவிகள் ஒருவருக்கொருவர் கேக்கை முகத்தில் தடவி ஆடி பாடினர். மேலும் ஜூஸ் பாட்டிலில் பீரை கலந்து குடித்துக்கொண்டு ஆட்டம் போட்டனர். அப்போது பள்ளி மாணவர்கள் சிலர் அங்கு வந்தனர். மாணவிகளின் ஆட்டத்தை கண்டு அதிா்ச்சி அடைந்த அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட 7 மாணவிகளையும் அழைத்து கண்டித்தார். மேலும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், 7 மாணவிகளையும் பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்து அவர் உத்தரவிட்டார். இந்நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவி ஒருவர் வீட்டில் இருக்கும்போது மிகவும் கவலையுடன் இருந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் விசாரித்தனர்.

மாணவி தற்கொலை முயற்சி

அப்போது மது குடித்ததை நினைத்து மாணவி வருத்தம் அடைந்து இருந்ததாகவும், இனிமேல் இதுபோன்ற தவறை செய்யமாட்டேன் என்றும் கூறினார். இந்நிலையில் விரக்தியடைந்த அந்த மாணவி கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றபின் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவிக்கு மீண்டும் உடல்நிலை மோசமானது. இதனால் அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளியில் மது குடித்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவத்தில் விரக்தியடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story