நிலக்கோட்டையை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும்
நிலக்கோட்டையை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பிரமலைக்கள்ளர் மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பின் மகாசபை கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் பொருளாளர் இளங்கோ, மூத்த உறுப்பினர் மாயத்தேவர், பொன்னையா தேவர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டமைப்பு செயலாளர் முருகன் வரவேற்றார்.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து தொடர்ந்து தனித்தொகுதியாக செயல்படும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியை சுழற்சி முறையில் பொதுத்தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு மனுவாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
மேலும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெறக்கோரி மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பிரமலைக்கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை கல்வி தகுதி அடிப்படையில் பணியில் அமர்த்த வேண்டும். அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நிலக்கோட்டை தொகுதி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.