மாநில அளவிலான கால்பந்து போட்டியில் நீலகிரி எல்லோ அணி சாம்பியன்


மாநில அளவிலான கால்பந்து போட்டியில் நீலகிரி எல்லோ அணி சாம்பியன்
x

கோத்தகிரியில் நடைபெற்று வந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் நீலகிரி எல்லோ அணி தஞ்சாவூரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

நீலகிரி

கோத்தகிரி, ஜூன்.8-

கோத்தகிரியில் நடைபெற்று வந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் நீலகிரி எல்லோ அணி தஞ்சாவூரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மாநில கால்பந்து போட்டி

நீலகிரி கால்பந்து கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நீலகிரி, கோவை, சென்னை, தேனி, திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், வேலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்று விளையாடின.இதில் சிறப்பாக விளையாடி 'ஏ' பிரிவில் நீலகிரி (எல்லோ) அணியும், 'பி' பிரிவில் தஞ்சாவூர் அணியும் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றன.

விறுவிறுப்பான ஆட்டம்

இறுதி போட்டி நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. ஆட்டம் தொடக்கத்தின் முதல் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே நீலகிரி அணி தனது முதல் கோலை அடித்தது.இதற்கிடையில் தஞ்சாவூர் அணி வீரர் அபாயகரமான ஆட்டத்தில் ஈடுபட்டதாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் தஞ்சாவூர் அணி 10 வீரர்களை கொண்டு விளையாடியது. தஞ்சாவூர் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில், அந்த அணி வீரர் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேறியது. இதையடுத்து முதல் பாதிநேர ஆட்ட முடிவில் நீலகிரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

நீலகிரி அணி சாம்பியன்

2-வது பாதிநேர ஆட்டத்தில் தஞ்சாவூர் அணிக்கு கிடைத்த மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் வீரர் கோலாக்கினார். பின்னர் அந்த அணி வீரர்கள் கோல் அடிக்க பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி நேரத்தில் நீலகிரி அணி மீண்டும் 2 கோல்களை அடித்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் நீலகிரி அணி 4-1 என்கிற கோல்கள் கணக்கில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பரிசளிப்பு விழா

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற நீலகிரி அணிக்கும், 2 வது இடத்தைப் பிடித்த தஞ்சாவூர் மாவட்ட அணிகள் மற்றும் அணி வீரர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. மாநில அளவில் நடைபெற இந்த இறுதி போட்டியை சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். கால்பந்து போட்டியை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story