கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் என்று நிர்மலா சீதாராமன் சொன்னது சரிதான்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி


கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் என்று நிர்மலா சீதாராமன் சொன்னது சரிதான்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
x

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் என்று நிர்மலா சீதாராமன் சொன்னது சரி தான் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மதுரை


கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் என்று நிர்மலா சீதாராமன் சொன்னது சரி தான் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

நிதி மேலாண்மை

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு மாநிலத்தின் உற்பத்தியின் அடிப்படையில்தான் கடன் இருக்க வேண்டும். நம்மை விட உற்பத்தி அதிகம் செய்யும் மாநிலம் மராட்டியம். எனவே கடன் வாங்குவதில் அவர்கள்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும். 2-வது இடத்தில் இருக்க வேண்டிய தமிழ்நாடு, முதல் இடத்தில் இருக்கிறது என்றால் மராட்டிய மாநிலம் உற்பத்தியில் கடனை குறைவாக வைத்து இருக்கிறார்கள். இது உண்மைதான். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நடக்காமல் இருந்திருந்தால் கடன் வாங்குவதில் 2-வது இடத்தில்தான் இருந்து இருப்போம்.

ஏன் நான் முன்பு போல பேசுவது இல்லை என்று கேட்கிறீர்கள்?. எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது எல்லாம் பேசுவது சரியாக இருக்காது. எந்த துறையில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்பதான் பேச வேண்டும். நான் 2021-ம் ஆண்டு கட்சியில் தொழில்நுட்ப அணி செயலாளர், பேச்சாளர் மற்றும் நிதித்துறை-ஓய்வூதியம், திட்டமிடுதல் துறை அமைச்சராக இருந்தேன். அதனால் கட்சி சார்பாகவும், அரசின் கொள்கை கருத்துக்களையும் தெரிவித்தேன். பின்னர் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவி, பேச்சாளர் குழுவில் இருந்து விலகி கொண்டேன். அதன்பின் அமைச்சராக எனது இலாகா பற்றி மட்டும் பேசி கொண்டு இருந்தேன். இப்போது நான் டிஜிட்டல் துறை அமைச்சராக இருக்கிறேன். எனவே நிதி, மேலாண்மை தொடர்பாக கருத்துக்களை அந்த அமைச்சர் பேசுவதுதான் மரபு.

கருத்துக்கள்

தமிழகத்தின் கடன் குறித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்த தகவல் உண்மையானது. கடனின் அளவு மாநிலத்தின் உற்பத்திற்கு ஏற்றப்படி தான் இருக்கும். அவர் சொன்னதில் இருந்து நான் இரண்டு கருத்துக்களை தான் சொல்ல விரும்புகிறேன். ஒன்று, நம்மை விட உற்பத்தியில் அதிகமாக உள்ள மராட்டியம் தான் கடனில் முதல் இடத்தில் இருக்க வேண்டும். ஆனால் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். அவர்கள் நம்மை விட சிறப்பாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். 2-வது விஷயம், நமக்கு யார் ஆட்சி காரணத்தினால் இந்த மோசமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று எண்ணி பார்க்க வேண்டும். நமக்கு உற்பத்தியில் 27 சதவீதம் கடன் இருக்கிறது. ஆனால் மத்திய அரசுக்கு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கு மேல் கடன் இருக்கிறது. அதுவும் பா.ஜனதா ஆட்சி வந்த பிறகு இது இன்னும் அதிகரித்து இருக்கிறது.

அப்படியென்றால் யார், யாருடைய மேலாண்மையை பற்றி கருத்து சொல்வது என்று நான் கேட்கிறேன். எந்த மாநிலத்திற்கு கடன் அதிகம் இருக்கிறது என்ற ஒரு எம்.பி.யின் கேள்விக்கு, நிர்மலா சீதாராமன் புள்ளி விவரத்துடன் ஒரு தகவல் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது உண்மை. அவர்கள் சொன்னது தகவல் அடிப்படையிலானது. அதனை அரசியல் ரீதியாகவோ, ஒப்பிட்டு பார்த்தாலோ, நான் சொன்ன கருத்துக்கள் எல்லாம் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story