என்.ஐ.டி. கல்லூரி மாணவர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை


என்.ஐ.டி. கல்லூரி மாணவர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை
x

என்.ஐ.டி. கல்லூரி மாணவர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

கல்லூரி மாணவர்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கணேஷ்புரம் பகுதியில் நேற்று காலை திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற ரெயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக பொன்மலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, யார் அவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில், அந்த வாலிபர் திருச்சியை அடுத்த மணிகண்டம் தீரன் மாநகரை சேர்ந்த போக்குவரத்து துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான சத்தியசீலனின் மகன் அஜய்(வயது 26) என்பது தெரியவந்தது. அஜய் திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் எம்.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில் நேற்று காலை திருவெறும்பூருக்கு வந்த அவர், ெரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் தனது நண்பருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் 'தனக்கு வாழ பிடிக்கவில்லை' என்றும், தனது ஏ.டி.எம். ரகசிய எண், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை வண்டியில் வைத்துள்ளதாகவும், தனது தாய், தந்தையிடம் சொல்லிவிடுமாறும் கூறியுள்ளார்.

பின்னர் அவர் ரெயில் நிலையத்தில் நடந்து சென்று திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ரெயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ரெயில் மோதியதில் அவரது உடல் இரண்டு துண்டுகளாக கிடந்தது.

காரணம் என்ன?

இதற்கிடையே அவரது நண்பர், அந்த வாய்ஸ் மெசேஜை அஜயின் பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். அதைக்கேட்டு பதறிப்போன சத்தியசீலன் உடனடியாக திருவெறும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு தனது மகனின் இருசக்கர வாகனம் நிற்பதை கண்ட அவர், அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சத்தியசீலன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது தனது மகன் அஜய் தான் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து பொன்மலை ரெயில்வே போலீசார் அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அஜய்யின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story