திருப்பூரில் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி
திருப்பூரில் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 6-ந் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.
திருப்பூர்
திருப்பூரில் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 6-ந் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.
பின்னலாடை எந்திர கண்காட்சி
பின்னலாடை உற்பத்தி துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவும் வகையில் திருப்பூர் ஹைடெக் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஹைடெக் வளாகத்தில் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கண்காட்சி அரங்கை திறந்துவைக்கிறார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கண்காட்சி கையேட்டை வெளியிட சைமா தலைவர் ஈஸ்வரன் பெற்றுக்கொள்கிறார்.
நிட்டெக் தலைவர் ராயப்பன் வரவேற்கிறார். நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி முன்னிலை வகிக்கிறார். இதில் டெக்மா தலைவர் கோவிந்தசாமி, சாய ஆலை சங்க தலைவர் காந்திராஜன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், சிம்கா தலைவர் விவேகானந்தன், டிப் தலைவர் அகில் மணி, டீமா தலைவர் முத்துரத்தினம், திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழுவை சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
275 அரங்குகள்
கண்காட்சியில் குளிரூட்டப்பட்ட இரண்டு மெகா அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், லூதியானா போன்ற உள்நாடு மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி, தைவான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 172 நிறுவனங்கள், ஆடை உற்பத்தி துறைக்கான அதிநவீன எந்திரங்கள் இடம்பெறுகின்றன. மொத்தம் 275 அரங்குகளில் நிட்டிங், டையிங், ரைசிங், காம்பாக்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தர ஆய்வு, செக்கிங், அயர்னிங், பேக்கிங் உள்ளிட்ட பின்னலாடைத்துறையின் அனைத்து பிரிவுகளுக்கான எந்திரங்கள் இயக்க நிலையில் காட்சிப்படுத்தப்படுகிறது.
இன்று தொடங்கும் கண்காட்சி வருகிற 6-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட ஜவுளி துறையினர், டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற வெளிமாநில ஆடை உற்பத்தி துறையினர் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். இந்த கண்காட்சியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை கொண்ட பின்னலாடை உற்பத்தி எந்திரங்கள் இடம் பெறுகிறது. கண்காட்சியை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்ப்பதாக ஹைடெக் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் ராயப்பன் தெரிவித்துள்ளார்.