நிட்டெக் கண்காட்சி


நிட்டெக் கண்காட்சி
x
திருப்பூர்

திருப்பூர்,

பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கான அதிநவீன தொழில்நுட்ப எந்திரங்களுடன் நிட்டெக் கண்காட்சியை தொழில்துறையினர் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

நிட்டெக் கண்காட்சி

பின்னலாடை உற்பத்திக்கான அதிநவீன தொழில்நுட்ப எந்திரங்களுடன் மிகப்பெரிய பின்னலாடை எந்திர கண்காட்சியான நிட்டெக் கண்காட்சி திருப்பூர் திருமுருகன்பூண்டி ஹைடெக் இன்டர்நேஷனல் வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

கண்காட்சியில் குளிரூட்டப்பட்ட இரண்டு மெகா அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், லூதியானா, பெங்களூரு நகரங்கள் மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி, தைவான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 165 நிறுவனங்களின் ஆடை உற்பத்தி துறைக்கான அதிநவீன எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 275 அரங்குகளில் நிட்டிங், டையிங், ரைசிங், காம்பாக்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தர ஆய்வு, செக்கிங், அயர்னிங், பேக்கிங் உள்ளிட்ட பின்னலாடைத்துறையின் அனைத்து பிரிவுகளுக்கான எந்திரங்கள் இயக்க நிலையில் இடம்பெற்றுள்ளன.

நவீன எந்திரங்கள்

நிட்டிங் முதல் பேக்கிங் வரை பின்னலாடை உற்பத்தி சார்ந்த அனைத்து பிரிவுகளுக்கான நவீன எந்திரங்களும் ஒரே இடத்தில் அணிவகுத்துள்ளன. சிறந்த வல்லுனர்கள், எந்திரங்களின் இயக்கம், புதுமைகள், உற்பத்தி திறன் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்கள்.

திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட ஜவுளி துறையினர், டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற வெளிமாநில ஆடை உற்பத்தி துறையினர் கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள பின்னலாடை தொழில் துறையினர் கண்காட்சியை பார்வையிட்டு எந்திரங்களை கொள்முதல் செய்வதற்கான வர்த்தக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்கை லைட்டுகள்

நேற்று 2-வது நாளாக கண்காட்சி நடந்தது. சனிக்கிழமை என்பதால் வர்த்தக விசாரணைக்காக தொழில்துறையினர் அதிகம் பேர் வந்து கண்காட்சியை பார்வையிட்டார்கள். நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களை இயக்கி செயல்பாடுகளை விளக்கி கூறினார்கள்.

பெரிய, பெரிய பின்னலாடை நிறுவனங்களில் ஆடைகள் தயாரிப்பு மற்றும் செக்கிங் செய்வதற்கு மின்விளக்குகள் பயன்படுத்தினாலும் சூரிய ஒளியில் காணும் போது ஆடைகளின் நிறம் சற்று வேறுபடும். ஆனால் இதை தவிர்க்கும் வகையில் முற்றிலும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் ஸ்கை லைட் இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மேற்கூரையில் இந்த லைட்டை பொருத்திவிட்டால் சூரிய ஒளியை பெற்று நிறுவனத்தின் உள்ளே பிரகாசமாக காட்சியளிக்கிறது. மின்சாரம் தேவையில்லை. 600 லக்ஸ் திறனுக்கு வெளிச்சம் இருக்கும். இதன் மூலம் ஆடைகளின் நிறத்தை சூரிய ஒளியில் காண்பதைப்போல் இருக்கும். அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான இந்த லைட்டுகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் இந்த ஸ்கை லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுபோல் பிரமாண்ட மின்விசிறிகளும் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரையும் கவர்ந்தது.

கட்டிங் எந்திரங்கள்

பின்னலாடைகளுக்கு ஏற்ப துணிகளை வெட்டுவதற்கான நவீன எந்திரம் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. முற்றிலும் தானியங்கி வசதியுடன் டி-சர்ட்டுக்கான துணிகளை வெட்டும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதாவது துணிகளை வேஸ்ட் இல்லாமல் வெட்டி அதிகப்படியான உற்பத்தியை கொடுக்கும் வகையில் சி.என்.சி. கட்டிங் எந்திரங்கள் உள்ளன. நாளொன்றுக்கு 30 ஆயிரம் பீஸ்களை வெட்டும் அளவுக்கு திறன் பெற்றது. இதனால் ஆடை உற்பத்தியை அதிகரிக்க முடியும். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்த எந்திரத்தை தொழில்துறையினர் வந்து பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனர். இத்தாலி நாட்டு தயாரிப்பான இந்த எந்திரத்தை திருப்பூரில் பெற வசதி செய்யப்பட்டுள்ளன.

நவீன நிட்டிங் எந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட நிட்டிங் எந்திரங்கள் உள்ளன. உள்ளாடை தயாரிப்புக்கு ஏற்ற வகையில் இந்த நிட்டிங் எந்திரங்கள் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மூட்டைகளைசுமக்கும் ரோபோ

தொழில் நிறுவனங்களில் பொருட்களை எடுத்துச்செல்வதற்கும், மூடைகளை தூக்குவதற்கும் தொழிலாளர்கள் முக்கிய தேவையாகும். ஆனால் வரும் காலங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அவற்றை சமாளிக்கும் வகையில் ரோபோவை வடிவமைத்துள்ளனர். கோவையை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் இந்த ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் மூட்டைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்வது, பொருட்களை எடுத்துச்செல்வது, பெட்டிகளை கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிலில் இதுபோன்ற ரோபோ பயன்பாடு பெரிதும் உதவும் என்பதால் அவற்றை தொழில்துறையினர் பார்வையிட்டு விசாரித்தனர்.

ஆடைகளுக்கு மதிப்பு கூட்டும் வகையில் சீக்குவன்ஸ் வேலைபாடுகளை மேற்கொள்வது வழக்கம். சிறிய ஸ்டோன்களை டி-சர்ட், ஆடைகளில் ஒட்டி பயன்படுத்தி வந்தனர். தற்போது சீக்குவன்ஸ் டாட் பிரிண்டிங் என்ற முறையில் சிறிய அளவில் கண்ணைக்கவரும் பல வண்ணங்களில் சீக்குவன்ஸ்களை ஆடைகளில் பிரிண்டிங் செய்யும் நவீன எந்திரம் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தைவான் நாட்டு தயாரிப்பான இந்த எந்திரத்தை திருப்பூரை சேர்ந்த நிறுவனத்தினர் வாங்கி விற்பனை செய்கின்றனர். ஆடைகள் மட்டுமில்லாமல் செல்போன், செருப்பு, சூ உள்ளிட்ட விரும்பிய பொருட்கள் மீதும் பிடித்த வடிவங்களை பிரிண்டிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

நாளையுடன் நிறைவு

இதுபோல் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட எந்திரங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில வர்த்தகர்களும் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளையுடன் (திங்கட்கிழமை) கண்காட்சி நிறைவு பெறுவதாக ஹைடெக் இன்டர்நேஷனல் நிறுவன இயக்குனர் ராயப்பன் தெரிவித்தார்.


Next Story