மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த வேதாரண்யம் அரசு பள்ளி மாணவி நிவேதிதா
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த வேதாரண்யம் அரசு பள்ளி மாணவி நிவேதிதா, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சாதிப்பதே தனது லட்சியம் என்று கூறினார்.
வேதாரண்யம்:
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த வேதாரண்யம் அரசு பள்ளி மாணவி நிவேதிதா, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சாதிப்பதே தனது லட்சியம் என்று கூறினார்.
மாநில அளவில் இரண்டாமிடம்
தமிழகத்தில் என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கடிநெல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதிதா 199.50 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் படித்தவர்களில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
மாணவி நிவேதிதா நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 592 மதிப்பெண்கள் பெற்று நாகை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு
மாணவி நிவேதிதாவை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருபாண்டியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து மாணவி நிவேதிதா கூறுகையில், எங்கள் கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தேன். நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தேன்.
நேற்று வெளியிடப்பட்ட என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் அரசு பள்ளியில் படித்தவர்களில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
சாதிக்க வேண்டும் என்பதே லட்சியம்
எனது தாய், தந்தை இருவருமே ஆசிரியர்கள். நான் காலை 4 மணிக்கே எழுந்து படிப்பேன். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஊக்கமே நான் அதிக மதிப்பெண் எடுக்க காரணம்.
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றார்.