என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கம்: கால்வாய் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக நேற்று 2-வது நாளாக பணி நடந்தது. இதற்காக புதிதாக கால்வாய் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 திறந்தவெளி சுரங்கங்களை அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது.
அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றும் இந்த பணி 2-வது நாளாக தொடர்ந்தது. மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக அங்குள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
புதிய பரவனாறு
இதற்காக நேற்று காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது.
மேலும் தர்மநல்லூரில் இருந்து வளையமாதேவி வரை 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து பழைய பரவனாற்றில் வெளியேற்றப்படும் நீரை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இதனிடையே பரவனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதுபற்றி அறிந்த விவசாயிகள், பரவனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தண்ணீரை தடுத்தால் பயிர்களுக்கு பாசனம் செய்ய முடியாது என்று கூறி அந்த பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, என்.எல்.சி. அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
வி.சாத்தப்பாடியில் உள்ள புதிய பரவனாற்றை கடந்து மறுபுறமுள்ள விளைநிலங்களுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாதை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. இதுபற்றி அறிந்ததும், அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து புதிய பரவனாறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையிலான போலீசார் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.