வருண் வாகனம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கியது
வருண் வாகனம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
நிலக்கரியின் தேவை அதிகரித்துள்ளதால் சுரங்கங்களை விரிவாக்கம் செய்ய என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 2-வது சுரங்க விரிவாக்க பணியை வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக கிராம மக்களிடம் இருந்து நிலத்தை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தி இருந்தது.
உடன்பாடு இல்லை
ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் சுரங்க விரிவாக்க பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் என்.எல்.சி. நிர்வாகத்துடனும், கிராம மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி. உறுதி அளித்தது. ஆனால் சிலருக்கு இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
சுரங்க பணியை தொடங்கிய என்.எல்.சி.
இந்த நிலையில் கையகப்படுத்திய நிலத்தில் என்.எல்.சி. நிர்வாகம் நேற்று 2-வது சுரங்க விரிவாக்க பணியை தொடங்கியது. அதாவது வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும் பதற்றமான சூழல் நிலவியதால் முன்னெச்சரிக்கையாக கலவரக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வருண் வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
போராட்டம்; 80 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்ததும் வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஜெகன், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலும், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ், சண்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கடலூர் மாவட்டத்தை விட்டு என்.எல்.சி. நிர்வாகம் வெளியேற வேண்டும் என்றும், இல்லையெனில் நிலம் கொடுத்தவர்களில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றும், ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், என்.எல்.சி.க்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பா.ம.க.வை சேர்ந்த 50 பேரை கைது செய்தனர்.
இதேபோன்று வளையமாதேவியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சேத்தியாத்தோப்பில் உள்ள தனித்தனி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்ததை கண்டித்து மறியல்
இந்த நிலையில், என்.எல்.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மற்றும் 4 மாவட்ட செயலாளர்களை கைது செய்ததை கண்டித்தும், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் கடலூரில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி தலைமையில் மாநில மாணவரணி கோபிநாத், இளைஞரணி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று விருத்தாசலத்தில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க. நகர செயலாளர்கள் முருகன், பில்லா மணி உள்பட 15 பேரையும், வேப்பூரில் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர்கள் நல்லூர் மேற்கு கமலி வேல்முருகன், மங்களூர் கோபி உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.