5 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்:என்.எல்.சி.யில் நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்புநிறுவன தலைவர் தகவல்


5 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்:என்.எல்.சி.யில் நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்புநிறுவன தலைவர் தகவல்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 3:32 PM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி.யில் நிலக்கரி பற்றாக்குறையால் 5 யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தெரிவித்துள்ளார்.

கடலூர்

வேலைவாய்ப்பு

என்.எல்.சி. நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு, தற்போது உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு 80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால், நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சாரத்தை சீராக உற்பத்தி செய்ய முடியும். என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் வேலைவாய்ப்பில் 20 போனஸ் மதிப்பெண்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களுக்குதான் அதிகவேலை

என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் தமிழர்கள். அதுபோல் நிரந்தர தொழிலாளர்களிலும் 83 சதவீதம் பேர் தமிழர்கள் தான் உள்ளனர். தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு இல்லை என்பதில் உண்மை இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை இழப்பீடு தொகையை வாங்காதவர்களுக்கு மட்டுமே 3 மடங்கு அதிகமாக இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இதுதான் காரணமே தவிர, ஒவ்வொரு பகுதிக்கும் இழப்பீட்டில் மாற்றம் இருக்கிறது என்பதில் எவ்வித உண்மையும் இல்லை.

தவறான வழிகாட்டுதல்

மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தால், பற்றாக்குறையான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு என்.எல்.சி. நிறுவனம் 2 ரூபாய் 30 பைசா என்ற தொகையில் கொடுக்கின்றது. அதே வேளையில் மின்சாரத்தை தமிழக அரசு, வெளிச்சந்தையில் வாங்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு 10 அல்லது 12 ரூபாய் கொடுக்க வேண்டும். மேலும் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் என்.எல்.சி.யில் மத்திய அரசின் பங்கு தான் அதிகளவில் உள்ளது. அதேபோல் என்.எல்.சி.க்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் தவறான வழிகாட்டுதலின் அடிப்படையில் நடக்கிறது. என்.எல்.சி. சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நெய்வேலி மற்றும் கடலூர் பகுதிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பழுப்பு நிலக்கரியில் இருந்து மெத்தனால் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், என்.எல்.சி. சுரங்க மேல் மணலில் இருந்து எம்.சாண்ட் தயாரித்து குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story