என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் பேட்டி
என்.எல்.சி.க்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
என்.எல்.சி.க்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
திறப்பு விழா
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநகர் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் வேலை இல்லாத காரணத்தால் கலவரம், பிரச்சினைகள் உருவாகிறது. காவிரி-வைகை - தாமிரபரணி இணைப்பு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தாமிரபரணியும் வைகையாறும் மோசமான நிலையில் உள்ளது, வைகை ஆறு சாக்கடை போல உள்ளது. தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டு தோறும் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து நீர் பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
வாக்குறுதிகள்
தி.மு.க. தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றிவிட்டது.பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏன் தி.மு.க. அரசு செயல்படுத்தப்படவில்லை. நெய்வேலியில் என்.எல்.சி. என்ற நிறுவனம் விளை நிலங்களை அழித்து நாசப்படுத்தி மண்ணையும் நீரையும் அழித்துக் கொண்டிருக்கிறது.
என்.எல்.சி. விவகாரம்
என்.எல்.சி.க்கு ஆதரவு கொடுக்கும் தமிழக அரசை கண்டிக்கின்றோம். மின்சாரத்திற்கு எவ்வளவோ மாற்று வழி உள்ளது. ஆனால் சோறுக்கு மண் மட்டும் தான் உள்ளது. இதற்கு முன்பு 40 ஆயிரம் ஏக்கர் அழித்துவிட்டார்கள். தற்பொழுது 50 ஆயிரம் ஏக்கர் கேட்கிறார்கள்.
தி.மு.க. அரசு விவசாயிகளின் எதிரி என்பதை எல்லா விவசாயிகளும் உணர்ந்துவிட்டார்கள்.என்.எல்.சி. விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலையிட வேண்டும். என்.எல்.சி.க்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அமைதியான போராட்டத்தை, காவல்துறையினர் வேண்டுமென்றே பிரச்சினையாக மாற்றி விட்டனர்.
அன்னூர் சிப்காட்
அன்னூர் சிப்காட் நிறுவனம் கொண்டு வர 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்ட போது, தரிசு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று போராட்டம் நடத்தினார்கள். அந்த திட்டத்தை அரசு நிறுத்தி விட்டது. அங்கே சிப்காட் வந்தால் 20 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். ஏன் தடுத்து நிறுத்துனீர்கள். அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா?. சோறு போடும் நிலத்தை அழிக்காதீர்கள் என டெல்லியில் சென்று அண்ணாமலை கூற வேண்டும். டெல்லியில் சென்று வாதிட்டு என்.எல்.சி. விவகாரத்தை அண்ணாமலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பா.ம.க.வின் நோக்கம் 2026-ல் புதிய கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.