என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை: 8 வாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள்  கோரிக்கை:  8  வாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

மத்திய அரசு முடிவெடுக்கும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என தொழிலாளர் சங்கத்தினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி என்எல்சி நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது தொழில் தகராறு சட்டத்தின் படி சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு நீதிபதியை பேச்சுவார்த்தைக்கு நியமிக்க முடியாது என என்.எல்.சி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

நீதிமன்ற நிவாரணத்தை எதிர்பார்த்து போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளதாக ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

மேலும், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை இரண்டு வாரங்களில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு மத்திய அரசு முடிவெடுக்கும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என தொழிலாளர் சங்கத்தினருக்கு நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என என்.எல்.சி.-க்கும் நீதிபதி அறிவுறுத்தினார்.


Next Story