நிலம் வழங்காத வட இந்தியர்களுக்கு என்.எல்.சி. வேலை வழங்கியது எப்படி? விசாரணை நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


நிலம் வழங்காத வட இந்தியர்களுக்கு என்.எல்.சி. வேலை வழங்கியது எப்படி? விசாரணை நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

நிலம் வழங்காத வட இந்தியர்களுக்கு என்.எல்.சி. வேலை வழங்கியது எப்படி? என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 862 பேருக்கு கடந்த 1990 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் வேலை பெற்ற 28 பேர் வட இந்தியர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்குமோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த குப்புசாமி என்பவர் தகவலறியும் உரிமைச்சட்டத்தின்படி எழுப்பிய வினாக்களுக்கு தங்களிடம் தகவல்கள் இல்லை என்று என்.எல்.சி. நிர்வாகம் கூறியுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

என்.எல்.சி. நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அந்த குடும்பங்களைச்சேர்ந்தவர்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கடந்த 12.12.2022 அன்று நான் எழுப்பிய வினாவுக்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி விடையளித்தார். அப்போது மத்திய அரசிடம் இல்லாத செய்திகளை என்.எல்.சி. நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டது எப்படி?

என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு வேலை வழங்கியது எப்படி? அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story