என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 25-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்


என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 25-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்
x

நெய்வேலியில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 25-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும், தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

கடலூர்

என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த தேதி அறிவிப்பு கூட்டம் நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு தலைவர் ராமமூர்த்தி, பொதுச்செயலாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுநல அமைப்பு தலைவர் தெய்வீகதாஸ், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு செயலாளர் சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

25-ந் தேதி வேலை நிறுத்தம்

கூட்டத்தில் என்.எல்.சி.யில் பணிபுரியும் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாரத பிரதமர் அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், என்.எல்.சி.க்கு ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கும் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு தகுந்தாற்போல் பதவி உயர்வு, சம்பள உயர்வு தொடர்பாக கடந்த 7.8.2020 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், அதில் ஷரத்து 2-3-ல் செய்யப்பட்டுள்ள விதிகளை மீறியதற்காக என்.எல்.சி. நிர்வாகத்தின் மீது மத்திய தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது, இதன் தொடர்ச்சியாக வருகிற 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.


Next Story