சுரங்க விரிவாக்க பணியை என்.எல்.சி. கைவிட வேண்டும்புரட்சிகர சோசலிஸ்டு கட்சி வலியுறுத்தல்
சுரங்க விரிவாக்க பணியை என்.எல்.சி. கைவிட வேண்டும் என்று புரட்சிகர சோசலிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
வடலூர்,
வடலூரில் புரட்சிகர சோசலிஸ்டு கட்சியுடன், தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்டு கட்சியை இணைக்கும் இணைப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட நிர்வாகி சம்பந்தம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜீவானந்தம், மத்தியக்குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ராமச்சந்திரன் வரவேற்றார். மத்திய செயற்குழு உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். புரட்சிகர இளைஞர் முன்னணியின் அகில இந்திய தலைவர் கொராணிசிபு, மத்தியக்குழு உறுப்பினர் ஆசீர்வாதம், கலியமூர்த்தி, அறவாழி, பட்டுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டிப்பது, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி. சுரங்கங்களை விரிவுபடுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். மேற்படி திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தி தருவதை தமிழக அரசு கைவிடவேண்டும். என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அருள்பிரகாசம் நன்றி கூறினார்.