என்.எல்.சி. பிரச்சினையில் பின்வாங்க மாட்டோம்


என்.எல்.சி. பிரச்சினையில் பின்வாங்க மாட்டோம்
x

என்.எல்.சி. பிரச்சினையில் பின் வாங்க மாட்டோம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தடை செய்ய வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதில் பா.ம.க.வின் பங்கு முக்கியமானது. இங்கு தொழில் வளர்ச்சி பெற சிப்காட் அமைக்க வேண்டும். திருப்பத்துார் -கிருஷ்ணகிரி ெரயில்பாதை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ெரயில்வே இல்லாத மாவட்ட தலைநகர் கிருஷ்ணகிரி மட்டுமே. அதே போல பாலாறு- தென்பெண்ணையை இணைக்க வேண்டும். இங்கு மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்க வேண்டும்.

தமிழகத்தை பொறுத்த மட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும். இது வரை 48 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு காரணம் கவர்னர் மட்டும்தான். இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், இதை தடை செய்ய கவர்னர் ஏன் தாமதப்படுத்துகிறார் எனத் தெரிய வில்லை. உடனடியாக தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

போதைப்பொருள்

அதே போல, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. இப்போதைய இளைஞர்கள் மது, ஆன்லைன் சூதாட்டம், போதை என 3 அரக்கர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். போதை ஒழிப்பு பிரிவுக்கு ஒரு டி.ஜி.பி., 3 ஐ.ஜி.க்கள் மற்றும் 17 ஆயிரம் போலீசார் நியமிக்க வேண்டும். இப்படி செய்தால்தான் அடுத்த தலைமுறையை காப்பற்ற முடியும். பெண்களும் போதைப் பொருளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதனால், போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

1988-ம் ஆண்டு முதல் என்.எல்.சி.யை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். அங்கு நிலத்தடி நீர் அகற்றப்பட்டு, 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பாலைவனமாக மாற்றப்பட்டு வருகிறது. இன்னும் 90 ஆயிரம் ஏக்கரை பாலைவனமாக்க குறிவைக்கப்பட்டுள்ளது.

பின் வாங்கமாட்டோம்

தேர்தலுக்காக நான் நாடகம் ஆடுவதாக அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகிறார். என் மண்ணையும், மக்களையும் காப்பாற்ற நான் எங்கு வேண்டுமானாலும் போவேன். எனக்கு தேர்தல் முக்கியமில்லை. மக்களும், மண்ணும்தான் முக்கியம். புதிய சுரங்கம் எதுவும் அமைக்கப்பட மாடடாது என்று சட்டசபையில், சட்டம் கொண்டு வர வேண்டும்.

என்.எல்.சி. பிரச்சினையில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். விவசாயத்தை காப்பாற்ற நாங்கள் எந்த எல்லைக்கும் போவோம். இனி வரும் காலங்களில் கடும் போராட்டத்தை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிங்கூர், நந்திகிராம் அளவுக்கு எங்களை போக வைத்து விடாதீர்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வியூகம் அமைத்து போட்டியிடுவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை வைத்து தேர்தலை சந்திக்க எங்களிடம் பணம் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ராஜா, சா.நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பொன்னுசாமி, கிருபாகரன், மாவட்ட செயலாளர் ஏ.பி.சிவா, மாநில மகளிர் அணித் தலைவி நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story