என்.எல்.சி. நிறுவனத்தை சுற்றி உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க குரல் கொடுப்பேன் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
என்.எல்.சி. நிறுவனத்தை சுற்றி உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க குரல் கொடுப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தொிவித்தாா்.
நெய்வேலி,
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ்குமாரை சந்தித்து பல்வேறு கோாிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து என்.எல்.சி. நிறுவன தலைவரை முதல் முறையாக சந்தித்து பேசினேன். இதில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தேன்.
அதற்கு என்.எல்.சி. தலைவர், நிறுவனம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேசினார். மேலும் என்.எல்.சி. நிறுவனம் சார்பில் இப்பகுதி மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்த குறிப்புகளை வழங்கி உள்ளார். இதில் உள்ள குறிப்புகளை படித்துப் பார்த்த பின்னர் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து மத்திய நிலக்கரித்துறை மந்திரி மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க குரல் கொடுப்பேன்.
பிரதமர் மோடி சமீபத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார் அதில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கு எடுத்துச் சென்று மக்களின் கோரிக்கையை வென்றெடுக்க என்றும் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.