1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றத்தால் வேதாரண்யத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றத்தால் வேதாரண்யத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஒடிசா மற்றும் தெற்கு சத்தீஸ்கருக்கு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.

கடல் சீற்றம்

வேதாரண்யம் தாலூகாவில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றமாக இருப்பதால் 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று அதிகாலை ஆறுகாட்டுதுறையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றமாக இருந்ததால் அவசர அவசரமாக கரை திரும்பினார். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி கிடந்தது.


Next Story