விவசாயிகள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை-குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டு
விவசாயிகள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
விவசாயிகள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன், தாசில்தார் சரளா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகையில், ''வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் தரமற்றதாக உள்ளன. அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை சீராக வழங்க வேண்டும். நாயுடுமங்கலத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றது.
மேலும் நாயுமங்கலத்தில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அவ்வபோது விபத்துகள் ஏற்படுகின்றது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வர வேண்டி உள்ளது. குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பெயரளவிலேயே குறைத்தீர்வு கூட்டங்கள் நடைபெறுகின்றன.
விவசாயிகளின் கூட்டங்களுக்கு அதிகாரிகள் வராமல் அவர்களுக்கு கீழ் உள்ள கடைநிலை ஊழியர்களை அனுப்பி வைத்து விடுகின்றனர்'' என்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து கொண்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.