குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை
ஜெய்ஹிந்த்புரம், கோவலன் நகர், வ.உ.சி. தெருக்களில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர்.
திருப்பரங்குன்றம்,
ஜெய்ஹிந்த்புரம், கோவலன் நகர், வ.உ.சி. தெருக்களில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர்.
மண்டல குழு கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் நேற்று மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் சுவிதாவிமல் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சுரேஷ்குமார், நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
முத்துலட்சுமி (ம.தி.மு.க.): மதுரை மாநகராட்சியின் 100-வது வார்டான அவனியாபுரம் பகுதியில் மின்கம்பங்களில் முதல் நாள் மாட்டப்படும் விளக்கு மறுநாள் எரிவதில்லை. 2 நாளைக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த குடிநீர் 4 நாளைக்கு ஒருமுறை என்று மாறியது. ஆனால் தற்போது 8 நாளாகியும் குடிநீர் வருவதில்லை. ஜெய்ஹிந்த்புரம், கோவலன் நகர், வ.உ.சி. தெருக்களில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
சுகாதார மையத்துக்கு மின்சாரம் துண்டிப்பு
இந்திராகாந்தி (தி.மு.க.): 95-வது வார்டில் விஸ்தரிப்பு பகுதியில் மழை காலங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சேமட்டான்குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றவும் இல்லை.
விஜயா (கம்யூ): ஹார்விப்பட்டிக்கு டிராக்டர்களில் வந்து கொண்டிந்த குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வார்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.3 லட்சம் நிதிக்கான திட்டபணி 8 மாதமாகியும் தொடங்கப்படவில்லை. சுகாதார மையத்துக்கு மின்கட்டணம் கட்டாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சிவசக்தி ரமேஷ் (தி.மு.க.): திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் பகுதியில் குப்பைகள் அள்ளுவதே இல்லை. 97-வது வார்டில் குடிநீர் வினியோகமும் முறையாக இல்லை.
குடிநீருடன் கழிவுநீர் கலக்கிறது
லக்ஷிகாஸ்ரீ (தி.மு.க.,) கோவலன் நகரில் உள்ள கழிவு நீரேற்று நிலையம் செயல்படவில்லை. இதில் ஜெய்ஹிந்துபுரம், ராமையா தெரு, வ.உ.சி தெருக்களில் குடிநீருடன் கழிவுநீர் கலக்கிறது இது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதை உதவி பொறியாளரிடம் கூறியும் கண்டு கொள்ளவில்லை.
ஸ்வேதா (காங்கிரஸ்):- திருநகர் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு காவிரி குடிநீர் வழங்குவதால் திருநகர் பகுதி மக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், போஸ், முருகன், கருப்பசாமி, முனியாண்டி, உள்பட பலர் பேசினார்கள்.