அடிப்படை வசதிகள் இல்லை... இடம்பெயரும் பழங்குடியினர்கள்...


அடிப்படை வசதிகள் இல்லை... இடம்பெயரும் பழங்குடியினர்கள்...
x

கோத்தகிரி அருகே வாகப்பனை கிராமத்தில் சாலை, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. தினமும் 8 கி.மீ. தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக வேலை, பள்ளி, ஆஸ்பத்திரிக்கு நடந்து செல்ல வேண்டும். நோயாளிகளை தொட்டிலில் தூக்கி செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் பழங்குடியின மக்கள் கிராமத்தை காலி செய்து இடம்பெயர்ந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணப்படுமா?.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே வாகப்பனை கிராமத்தில் சாலை, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. தினமும் 8 கி.மீ. தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக வேலை, பள்ளி, ஆஸ்பத்திரிக்கு நடந்து செல்ல வேண்டும். நோயாளிகளை தொட்டிலில் தூக்கி செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் பழங்குடியின மக்கள் கிராமத்தை காலி செய்து இடம்பெயர்ந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணப்படுமா?.

அடர்ந்த வனப்பகுதி

கோத்தகிரியில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் வாகப்பனை கிராமம் உள்ளது. இங்கு இருளர் இன மக்கள் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோத்தகிரியில் இருந்து கூட்டாடா அல்லது தூனேரி கிராமத்துக்கு பஸ், ஜீப்பில் சென்று, அங்கிருந்து 8 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதி வழியாக கிராமத்துக்கு செல்ல வழி உள்ளது. பழங்குடியின மக்கள் வேலைக்கு செல்லவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தினமும் 16 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குழந்தைகள் அரவேனு, கரிக்கையூர், மெட்டுக்கல் கிராமங்களில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளிகளில் தங்கி படித்து வருகின்றனர். ஆரம்ப கல்வி கற்கும் குழந்தைகள் விடுதியில் தங்கி படிப்பதில் சிக்கல் உள்ளது. மேலும் குழந்தைகளை கையில் சுமந்தவாறு பழங்குடியினர்கள் சாலை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து நடந்து வருகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், தொழிலாளர்கள், குழந்தைகள் வனப்பகுதி வழியாக சென்று வர முடியாத நிலை உள்ளது.

தொட்டில் கட்டி செல்கின்றனர்

இதனால் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை சிகிச்சைக்காக பழங்குடியினர்கள் தொட்டில் கட்டி 8 கி.மீ. தூரம் சுமந்து செல்கின்றனர். பின்னர் வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. 2 பேர் மாற்றி, மாற்றி நோயாளிகளை தூக்கி வரும் சம்பவம் நடந்து வருகிறது.

இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறியதாவது:-

விவசாயிகள் இடுபொருட்கள் கொண்டு செல்ல முடியாததால், 200 ஏக்கர் பரப்பளவில் மேற்கொண்டு வந்த விவசாயத்தை கைவிட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகப்பனையில் 60 குடும்பத்தினர் வசித்தனர். பள்ளி, வேலை, ஆஸ்பத்திரிக்கு பல கி.மீ. தூரம் நடந்து சென்று வர முடியாததால், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை காலி செய்தனர். அவர்கள் சமவெளி பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

அடிப்படை வசதிகள்

பழங்குடியினர்கள் எங்கு இறந்தாலும், தங்களது சொந்த ஊரில் அடக்கம் செய்வது வழக்கம். மக்கள் இடம்பெயர்ந்து சென்றாலும், இறப்பு நேரிட்டால் உடல்களை சுமந்து வந்து, வாகப்பனையில் அடக்கம் செய்து வருகிறோம். முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் நடந்து சென்று பெற்று வருகின்றனர். குடிநீர் வசதி சரிவர இல்லாததால், வனப்பகுதியில் ஊற்றுநீரை குடங்களில் எடுத்து வர வேண்டி உள்ளது. ஆனால், சாலை, கழிப்பிடம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, இதை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story