15 ஆண்டுகளாக பஸ்கள் வராமல் புறக்கணிக்கப்பட்ட தேவதானப்பட்டி பஸ் நிலையம்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


15 ஆண்டுகளாக பஸ்கள் வராமல்  புறக்கணிக்கப்பட்ட தேவதானப்பட்டி பஸ் நிலையம்:  நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

15 ஆண்டுகளுக்கும் மேல் பஸ்கள் வராமல் புறக்கணிக்கப்பட்ட தேவதானப்பட்டி பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி

பஸ் நிலையம் என்றால் பஸ்கள் வந்து செல்ல வேண்டும். அதில் பயணம் செய்ய மக்கள் வருகை தர வேண்டும். ஆனால், பஸ்கள் வருவதே இல்லை. அதனால், மக்களும் வருவது இல்லை என்ற நிலை இருந்தால் அந்த பஸ் நிலையம் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ள பஸ் நிலையம்.

தேவதானப்பட்டி பஸ் நிலையம்

தேனி-திண்டுக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் இந்த ஊரை தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கடந்து செல்கின்றன. 24 மணி நேரமும் இந்த சாலையில் பஸ்கள் சென்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேனி, கம்பம் மற்றும் கேரள மாநிலம் குமுளிக்கு வரும் பஸ்கள் அனைத்தும் இந்த ஊரை கடந்து தான் வர வேண்டும்.

பேரூராட்சியாக திகழும் தேவதானப்பட்டியில் பல ஆண்டுகளாக பெயரளவில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. பழைய கட்டிடம் தகர்க்கப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டதால் இனிமேலாவது பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்லும் என்று மக்கள் ஆவலுடன் இருந்தனர்.

பஸ்கள் வருவதில்லை

பஸ் நிலையம் திறப்பு விழா கண்ட சில காலம் மட்டும் பஸ்கள் வந்து சென்றன. அதன்பிறகு பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வருவது இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வருவதே இல்லை. அதற்கு பதில், பஸ் நிலையத்துக்கு வெளியே சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது.

பஸ் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகன நிறுத்தம் மட்டுமே தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள கழிப்பிடங்கள் பயன்பாடு இன்றி கிடக்கின்றன. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக இது மாறி வருகிறது.

சாலையில் பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதால் போக்குவரத்து இடையூறு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பலர் உயிரும் பறிபோய் உள்ளன. சாலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் போது மழை பெய்தால் நனைந்து கொண்டும், வெயில் அடித்தால் காய்ந்து கொண்டும் நிற்கும் அவலம் நீடிக்கிறது.

போக்குவரத்து நெரிசல்

பஸ் நிலையமே காட்சிப் பொருளாக உள்ள நிலையில், அங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது. அதுவும் அமைத்த சில நாட்களில் இருந்தே பயன்பாடு இன்றி தான் இருக்கிறது. பஸ்கள் வந்து செல்லாததால் பஸ் நிலைய வளாகம் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. பஸ்கள் நிறுத்த வேண்டிய இடங்களில் கார், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், விபத்துகள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். மக்களுக்கும் பாதுகாப்பான சூழல் ஏற்படும். ஆனால், பஸ் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

பயன்பாட்டுக்கு வர வேண்டும்

இதுதொடர்பாக தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

செல்லப்பாண்டி (சமூக ஆர்வலர், தேவதானப்பட்டி):- தேவதானப்பட்டி பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வருவதே இல்லை. இது மக்களுக்கு பல்வேறு சிரமங்களை கொடுக்கிறது. அரசு நிதியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் பயன்பாட்டில் இருந்தால் தான் அந்த திட்டம் அர்த்தமானதாக இருக்கும்.

ஆனால், இங்கு அரசு நிதியை செலவு செய்து கட்டப்பட்ட பஸ் நிலையம் காட்சிப் பொருளாகவே உள்ளது. இங்கு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள கழிப்பிடங்களை பராமரிப்பதோடு, பெண்களுக்கு இலவச கழிப்பிட வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

சுரேஷ் (சமூக ஆர்வலர், தேவதானப்பட்டி):- பஸ் நிலையத்துக்குள் பஸ் வராததால், இங்குள்ள பிரசித்தி பெற்ற மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில், மஞ்சளாறு அணை போன்ற இடங்களுக்கு வரும் மக்கள், இங்கிருந்து பல ஊர்களுக்கு சென்று பணி புரிபவர்கள் சிரமம் அடைகின்றனர். சிறிய கிராமங்களில் கூட பயணிகள் நிழற்குடை உள்ளது. ஆனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் தேவதானப்பட்டி பேரூராட்சியில் பஸ் நிலையம் இருந்தும் பஸ்சுக்காக சாலையில் கால் கடுக்க மக்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

போலீஸ் ரோந்து

எனவே பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அங்கு பயணிகளுக்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இரவு நேரங்களில் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக பல பஸ்கள் செல்கின்றன. அவற்றையும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதி (சமூக ஆர்வலர், தேவதானப் பட்டி) :- தேவதானப்பட்டி பஸ் நிலையம் கட்டும் போதே, பயணிகள் அமர போதிய இடவசதியோ, இருக்கை வசதியோ செய்யப்படவில்லை. எனவே, பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், அங்கு பயணிகளுக்கான அடிப்படை தேவைகளும் முக்கியம். தற்போது இந்த பஸ் நிலைய வளாகத்துக்குள் சிலர் மது அருந்துவதும், மதுபோதையில் சாலையில் வந்து தகராறு செய்வதும் அடிக்கடி நடக்கிறது. எனவே போலீசாரும் இந்த பகுதியில் அடிக்கடி ரோந்து வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story