கலப்புத்திருமணம் செய்துகொண்ட தம்பதியின் மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை 2 வாரத்துக்குள் வழங்க வேண்டும்
கலப்புத்திருமணம் செய்துகொண்ட தம்பதியின் மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை 2 வாரத்துக்குள் வழங்க வேண்டும்: அம்பத்தூர் தாசில்தாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் மனோஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நானும், என் மனைவியும் காதலித்து கலப்புத்திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, எங்கள் இருவரில் ஒருவரது சாதியை குறிப்பிட்டு சாதிச்சான்றிதழ் வாங்க முடியும். அதை விரும்பாத நாங்கள், எங்கள் மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் பெற முடிவு செய்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பம் செய்தோம். ஆனால் இதுவரை சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் வழங்கவில்லை. வருகிற சரஸ்வதி பூஜையை முன்னிட்டு என் மகனை பள்ளியில் சேர்க்க உள்ளேன். அதனால் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அம்பத்தூர் தாசில்தார் தரப்பில், 'மனுதாரரின் விண்ணப்பத்தின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரது விசாரணை முடிந்ததும் சான்றிதழ் வழங்கப்படும்' என்று கூறப்பட்டது. அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, 2 வாரத்துக்குள் மனுதாரர் மகனுக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.