அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை - டி.டி.வி. தினகரன்


அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை - டி.டி.வி. தினகரன்
x
தினத்தந்தி 28 Dec 2022 1:44 PM IST (Updated: 28 Dec 2022 1:58 PM IST)
t-max-icont-min-icon

இரு தேசிய கட்சியில் ஏதேனும் ஒரு கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.ம.மு.க.வில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களை வரச்சொல்லி இருக்கிறேன். அ.தி.மு.க.வினர் எங்கள் கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க முடியும். அ.ம.மு.க. வீரர்களின் பட்டாளம். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. சின்னம் இருந்தாலும், எதிர்வரும் தேர்தலில் எந்த பலனும் அ.தி.மு.க.வுக்கு இருக்காது.

கட்சி தொடங்கி 5 ஆண்டுகளாகிறது. 2 தேர்தல்கள் எங்களுக்கு பின்னடைவு தான். இருந்தாலும் தொண்டர்களும், நிர்வாகிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

மார்ச் 23 ஆம் தேதி வரை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. 2 மாவட்டச் செயலாளர்கள் அ.தி.மு.க.வுக்கு சென்றதால் அ.ம.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறிய தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். அ.தி.மு.க. இன்று தவறானவர்கள் கையில் உள்ளது. பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது.

எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அ.தி.மு.க.வுடன் இணைவீர்களா? என்று அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா? என்று கேட்கிறீர்கள். எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும்.

சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிறில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது. நாங்கள் வளர்ந்து வரும் ஒரு இயக்கம். வரும் காலத்தில் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடிய உறுதியான தொண்டர்கள் இயக்கம். அதை அடையும் வரை போராடுவோம். ஓயமாட்டோம்.

நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயாராக உள்ளது

இரு தேசிய கட்சியில் ஏதேனும் ஒரு கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அந்த வாய்ப்பு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.

அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் சேர்ந்து சரியான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் திமுகவை வீழ்த்தலாம், வரும் நாடாளுமன்றத்திலும், சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமைக்கலாம் என கூறினார்.


Next Story