செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில் மாற்றமில்லை என அறிவிப்பு
மன்னார்குடி-கோவை இடையே இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டதை வர்த்த சங்கத்தினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
மன்னார்குடி-கோவை இடையே இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டதை வர்த்த சங்கத்தினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயிலின் வழித்தடத்தை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும் என திருவாரூரை சேர்ந்த அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் ேகாரிக்கை விடுத்தனர்.
செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் வந்த பின்னர் என்ஜின் மாற்றுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த ரெயிலை திருவாரூர் வரை இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனை கண்டித்து மன்னார்குடியில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடந்தது. இதில் வர்த்தக சங்கம் சார்பில் அனைத்து அரசியல் கட்சியினர், சேவை சங்கங்கள், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர்.
நேரம் குறையும்
இந்த நிலையில் மன்னார்குடி -கோவை இடையே செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன் மற்றும் பின் பக்கம் என இருபுறமும் என்ஜின் பொருத்தி மன்னார்குடி வரை ரெயிலின் வழித்தடத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் 2 என்ஜின்கள் பொருத்தப்படுவதால் நீடாமங்கலத்தில் காத்திருக்கும் நேரம் 2 நிமிடமாக குறைந்து விடும் என்பதால் பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இனிப்பு வழங்கினர்
இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் நேற்று மன்னார்குடி ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்து, முதன் முதலாக 2 என்ஜினுடன் வந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் அங்கு இருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.