முதல்-அமைச்சர் வருகைக்காக அரசுக்கு எந்த செலவும் வைக்கவில்லை; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
முதல்-அமைச்சர் வருகைக்காக அரசுக்கு எந்த செலவும் வைக்கவில்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
டி.என்.பாளையம்
முதல்-அமைச்சர் வருகைக்காக அரசுக்கு எந்த செலவும் வைக்கவில்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
கருணாநிதி சிலை
டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் படிப்பகத்துடன் கூடிய முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.
இந்தநிலையில் கள்ளிப்பட்டியில் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சிலை அமைக்கப்படும் இடத்தில் கூடுதலாக படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது, ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 2 இடங்களில் கருணாநிதியின் முழு உருவ சிலை இருந்தாலும் வடக்கு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஒரே சிலை இது தான்.
வரவேற்பு
சிலை திறப்பு விழாவிற்காக வரும் முதல்-அமைச்சர் ஸ்டாலினை ஊத்துக்குளியில் இருந்து குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், கோபி என வழியெங்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
சிலை திறப்பு விழா முடிந்தவுடன் கள்ளிப்பட்டியில் முதல்-அமைச்சர் சிறப்புரையாற்ற உள்ளார்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு 700 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளது, அங்கு போதிய அளவு மருந்துகள் இருப்பு உள்ளது.
கட்சி செலவு
கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் தனியாரிடம் விலைக்கு வாங்கப்பட்டு, சட்டப்படி அமைக்கப்பட்டு உள்ளது. 13-க்கும் மேற்பட்ட துறைகளில் அனுமதி பெற்றும், கலெக்டரிடம் தடையின்மை சான்று பெற்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் வருகைக்காக அரசு நிலத்திலோ, சாலையிலோ கொடி, பேனர் வைக்காமல் தனியாரிடம் அனுமதி பெற்று கொடி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பணத்தை கூடுதலாக செலவு செய்து உள்ளதாக தவறான பிரசாரம் செய்யப்பட்டது, ஆனால் இந்த திறப்பு விழாவுக்கு கட்சி பணம் செலவு செய்யப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரிடம் வழங்கும் புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டு மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
ஆவணங்கள்
முதல்-அமைச்சர் வருகைக்கோ, கருணாநிதியின் சிலை அமைப்பதற்காகவோ அரசுக்கு எந்த செலவும் வைக்கவில்லை, இது தொடர்பாக அனைத்து ஆவணங்களும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.