அ.தி.மு.க.வுடன் எந்த சர்ச்சையும் இல்லை


அ.தி.மு.க.வுடன் எந்த சர்ச்சையும் இல்லை
x

அ.தி.மு.க.வுடன் எந்த சர்ச்சையும் இல்லை என பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

அ.தி.மு.க.வுடன் எந்த சர்ச்சையும் இல்லை என பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.

பேட்டி

தஞ்சை மாநகரில் நேற்று மாலை நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்த பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கெடுபிடியை தமிழக அரசு செய்கிறது. போலீஸ் நிலையத்துக்கு அனுமதி கேட்டு சென்ற விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரை மதிப்புடன் நடத்தப்படவில்லை எனவும், முன்பு இல்லாத கெடுபிடி இந்த முறை இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

மக்கள் தயாராக இருக்கிறார்கள்

எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்து விரோத ஆட்சி தான் என்பதை மீண்டும், மீண்டும் நிருபிக்கிறார்கள். தொடர்ந்து இந்து உணர்வை புண்படுத்த வேண்டாம்.சனாதனத்தை ஒழிப்போம், இந்து மதத்தை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் தி.மு.க. திருத்திக்கொள்ள வேண்டும். அப்படி திருந்தவில்லை என்றால் வருகிற தேர்தலில் தி.மு.க.வை மக்கள் திருத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது விரைவில் சட்டமாகும். இந்திய அரசியலில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை? என ஜனாதிபதிக்கு வாக்களிக்காமல் புறக்கணித்த தி.மு.க. அவருக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.

எந்தவொரு சர்ச்சையும் இல்லை

பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே எந்தவொரு சர்ச்சையும் இல்லை. இது குறித்து யாரும் பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமியும் கூறியுள்ளார். இப்போது கூட்டணி இல்லை. தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தான் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். கூட்டணி முறிந்துவிட்டது என்ற அர்த்தத்தில் அதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.புதுடெல்லியில் உள்ள எங்கள் கட்சி தலைவர்கள் மோடி, அமித்ஷா, நட்டா போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து முடிவு எடுப்பர். அதனால, கீழ் நிலையில் உள்ளவர்கள் வார்த்தைச் சூடுகளை இரு தரப்பிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story