மின் கட்டணம், வரிகளை உயர்த்தாமல் எந்த அரசாங்கமும் நடக்காது அமைச்சர் துரைமுருகன் பேட்டி


மின் கட்டணம், வரிகளை உயர்த்தாமல் எந்த அரசாங்கமும் நடக்காது அமைச்சர் துரைமுருகன் பேட்டி
x

மின் கட்டணம், வரிகளை உயர்த்தாமல் எந்த அரசாங்கமும் நடக்காது என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

மின் கட்டணம், வரிகளை உயர்த்தாமல் எந்த அரசாங்கமும் நடக்காது என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

காட்பாடி தாலுகாவில் பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜங்காளப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களையும், சேனூர் பாரதிநகரில் பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்தும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில செயலாளர் செல்வம், தலைமையாசிரியர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்டிக்கப்பட வேண்டும்

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

பா.ஜ.கவினர் வேலூர் மாநகராட்சியின் உள்ளே அத்துமீறி நுழைந்துள்ளனர். நாங்கள் கூட அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் செய்தோம். ஆனால் அத்துமீறியது கிடையாது. ஆனால் பா.ஜ.கவினர் மத்தியில் ஆளும் கட்சி என்பதால் வரம்பு மீறி நடந்து கொண்டனர். இது கண்டிக்கபட வேண்டியதாகும்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலைகள் சரியில்லை, ஸ்மார்ட் சிட்டி வேலைகள் சரியாக நடக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இவைகள் அனைத்தும் அ.தி.மு.க ஆட்சியில் நடந்தது. அ.தி.மு.க., ஒப்பந்ததாரர்கள் தான் பணிகளை செய்தனர்.

ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கு காட்பாடி தொகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி செய்ய கொடுத்தனர். ஆனால் அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதுவரையில் நடைபெற்ற பணிகள் சரியாக நடக்காததற்கு முழு முதற்காரணம் அ.தி.மு.க தான். பா.ஜ.கவினர் அ.தி.மு.கவினருடன் கூட்டு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால் இவர்கள் அ.தி.மு.கவை கண்டித்து தான் போராட்டம் செய்திருக்க வேண்டும்.

சில்லித்தனமானது

நான் ஒரு அமைச்சர். என் தொகுதியிலேயே சாலைகள் சரியில்லை. இதற்கு அ.தி.மு.க தான் காரணம்.

சில நேரங்களில் மின் கட்டணம், வரிகளை உயர்த்தாமல் எந்த அரசும் நடக்காது. அதைதான் அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஏற்றியதைவிட மின் கட்டணம் நாங்கள் ஏற்றியது மிக சொர்ப்பம் தான். ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுவது சில்லித்தனமானது.

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை விரைவில் சரி செய்வார்கள்.

விருதம்பட்டு முதல் காட்பாடி ரெயில்வே பாலம் வரையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் மேலும் ரெயில்வே மேம்பால பகுதியில் மற்றொரு மேம்பாலம் வேண்டும் என முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். முதல் கோரிக்கையாக இதனை வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story