உடைந்த உபகரணங்களுடன் காட்சி பொருளாய் இருக்கும் பூங்கா


உடைந்த உபகரணங்களுடன் காட்சி பொருளாய் இருக்கும் பூங்கா
x

உடைந்த உபகரணங்களுடன் காட்சி பொருளாய் இருக்கும் பூங்கா

திருப்பூர்

திருப்பூர்

பனியன் தொழிலால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் மாநகர மக்களுக்கு பொழுது போக்கிற்கான அம்சங்கள் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா மட்டும் ஓரளவிற்கு உள்ளது. இது தவிர ராயபுரம் மற்றும் மாநகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் ஓய்வின்றி உழைக்கும் திருப்பூர் மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது.

சேதமடைந்த உபகரணங்கள்

இப்படிப்பட்ட நிலையில் பார்க் ரோட்டில் உள்ள பூங்கா சரியான பராமரிப்பின்றி இருப்பது பொதுமக்களை வருத்தமடைய செய்துள்ளது. தற்போது இந்த பூங்காவில் பழுதடைந்தும், சேதமடைந்தும் காணப்பட்ட பல அலங்கார மின்விளக்குகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோன்று மின்மோட்டார், ஒலிப்பெருக்கிகள் என சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பொதுமக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் நீண்ட நாட்களாக உடைந்து கிடப்பதால் இங்கு வரும் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்கு வழியின்றி கவலையடைகின்றனர்.

இதேபோன்று இங்குள்ள பல செயற்ைக நீரூற்றுகள் பராமரிக்கப்படாமல் காட்சிப்பொருளாக இருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வந்த இந்த நீரூற்றுகள் காற்று வாங்கி கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் ஏமாற்றம்

குறிப்பாக குழந்தைகள் செயற்கை நீரூற்றுகளிலிருந்து பீறிட்டு பாயும் தண்ணீரை பார்த்து குதூகலமடைவார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவை வறண்டு போய் கிடப்பதால் ஆவலுடன் வரும் குழந்தைகள் மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர். இதேபோன்று இங்குள்ள சிறிய காட்சி கூடமும் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த பூங்காவில் சேதமடைந்தும், பாழடைந்தும் காணப்படும் விளையாட்டு உபகரணங்களை பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மாநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த பூங்காவிற்கு சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். எனவே இதற்கு முக்கியத்துவம் கொடுத்து சீரான இடைவெளியில் பூங்காவை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வறண்டு கிடக்கும் பூங்கா

இதேபோன்று திருப்பூர் கே.ஆர்.இ.லே-அவுட்டில் உள்ள பூங்கா முற்றிலும் பராமரிப்பின்றி வெறும் காட்சி பொருளாக உள்ளது. கடந்த காலங்களில் இந்த பூங்கா பசுமையாக இருந்த நிலையில் தற்போது பூங்காவில் எந்த ஒரு இடத்திலும் புற்களோ, செடிகளோ இல்லை. இதனால் இந்த பூங்கா பசுமையை இழந்து வறண்டு போன நிலமாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே இருக்கும் சிமெண்டு இருக்கைகளும் பாழடைந்த நிலையில் உள்ளன. பூங்காவில் எந்த விளையாட்டு உபகரணங்களும் இன்றி மைதானம் போல உள்ளது. மேலும் இங்குள் செயற்கை நீரூற்றும் காட்சிப்பொருளாக உள்ளது. இவ்வாறு எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமும் இன்றி காணப்படும் இந்த பூங்காவால் எந்த ஒரு பலனும் இன்றி சுற்றுவட்டார பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். எனவே இந்த பூங்காவில் தேவையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும், புல்வெளி, செடிகளுடன் பூங்காவை பசுமையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் நல்ல முறையில் பொழுதை கழிப்பதற்கு பூங்காக்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.



Next Story