விலைவாசி உயர்வுக்கு வணிகர்கள் காரணம் அல்ல
விலைவாசி உயர்வுக்கு வணிகர்கள் காரணம் அல்ல என்று, கும்பகோணத்தில் விக்கிரமராஜா கூறினார்.
கும்பகோணம், மார்ச்.15-
விலைவாசி உயர்வுக்கு வணிகர்கள் காரணம் அல்ல என்று, கும்பகோணத்தில் விக்கிரமராஜா கூறினார்.
பேட்டி
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வருகிற மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது.இதில் கார்ப்பரேட் கம்பெனிகளால் நசுக்கப்பட்டுள்ள வியாபாரத்தையும் வியாபாரிகளையும் மீட்டெடுப்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்- அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.ஜி.எஸ்.டி. வணிகவரித்துறை அதிகாரிகள் 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள், 8 ஆண்டுகள் என முன் தேதிகளை கணக்கிட்டு பல்வேறு வியாபாரிகளுக்கு வட்டியுடன் வரி செலுத்த நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். இதில் உள்ள இடர்பாடுகள் குறித்து வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் துறை அமைச்சரை நேரில் சந்தித்து தெரிவிக்க உள்ளனர்.
விலைவாசி உயர்வு
வியாபார பொருட்களை பதுக்கி வைப்பது எளிதான காரியம் இல்லை. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும்.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை பதிக்கி வைக்கின்றன. இதற்கு அரசு துணை போகிறதோ என்கிற அச்சம் வியாபாரிகளுக்கு எழுகிறது. விலைவாசி உயர்வுக்கு வணிகர்கள் காரணம் அல்ல.அரசின் செயல்பாடுகளால் விலைவாசி உயர்கிறது. தற்போது சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் மற்ற அனைத்து பொருட்களின் விலை உயரக்கூடிய சூழல் ஏற்படுகிறது.விலைவாசி உயர்வுக்கு அரசின் வரிவிதிப்பு போன்றவை காரணமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே வரி என சூளுரைத்து வருகிறார். ஒரே வரி என்பதை 4 கட்டங்களாக பிரிப்பதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.
4 வழிச்சாலை
அடுத்த மாதம்(ஏப்ரல்) 13-ந்் தேதி டெல்லியில் அனைத்து மாநில வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வியாபாரிகளின் இடர்பாடுகள் குறித்து தெரிவிக்கப்படும்.விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த 4 வழிச்சாலை பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முழுவதும் முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினாா்.பேட்டியின் போது தஞ்சை மாவட்டத் தலைவர் சி, மகேந்திரன், மண்டலத் தலைவர் எல்.செந்தில்நாதன், செயலாளர் வி.சத்தியநாராயணன் மற்றும் பலர் இருந்தனர்.