தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு; கருகும் குறுவை நெற்பயிர்கள்
தஞ்சை அருகே தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு குறுவை நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை அருகே தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு குறுவை நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறுவை நெற்பயிர்கள்
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.தொடக்கத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஆனால் ஆறுகளில் தண்ணீர் செல்கின்றதே தவிர சில கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாததால் குறுவை நெற்பயிர்கள் கருகி வருகின்றன. தஞ்சையை அடுத்த மணல்மேடு பகுதியில் சுமார் 500 ஏக்கரில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
வயல்களில் வெடிப்பு
இந்த பகுதிக்கு தென் பெரம்பூரில் இருந்து ஜம்பு காவேரியில் தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஜம்பு காவேரியில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் நடவு நட்டு 20 நாட்களான குறுவை பயிர்கள் காய்ந்து வருகின்றன. தண்ணீர் இல்லாததால் வயல்களில் பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதை பார்த்து வேதனை அடைந்த அப்பகுதி விவசாயி முனியாண்டி என்பவர் காய்ந்த பயிர்கள் மத்தியில் சோகத்துடன் படுத்து கிடந்தார். மேலும் அவர், தன் கண்முன்னே காய்ந்து வரும் நெற்பயிரை கைகளில் எடுத்து கண்ணீர் சிந்தினார். இது குறித்து விவசாயி முனியாண்டி கூறும் போது, நான் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து நடவு செய்தேன். கடந்த 20 நாட்களாக ஜம்பு காவேரியில் தண்ணீர் வரவில்லை.
காப்பாற்ற நடவடிக்கை
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதை பார்க்க வேதனையாக உள்ளது. வயல்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வயல்களில் படுத்து உள்ளேன். உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.