உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்ய தேவையில்லை-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்ய தேவையில்லை-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்ய தேவையில்லை-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை

சித்த மருத்துவ உதவி அதிகாரி பணிக்கு ஏற்கனவே தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்ய தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உதவி அதிகாரி பட்டியல்

மதுரை ஐகோர்ட்டில் டாக்டர்கள் சுகந்தி, முஜிதாபாய் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ம் ஆண்டில் சித்த மருத்துவத்துறையில் தற்காலிக அடிப்படையில் உதவி மருத்துவ அதிகாரி பணி நியமன அறிவிப்பை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த பதவிக்கு நாங்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதினோம். இந்த பதவிக்கு தேர்வானவர்கள் இறுதிப்பட்டியலில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை.

ஆனால் உரிய மதிப்பெண் பெற்றும் ஆதிதிராவிடர்களின் இடஒதுக்கீட்டின்படி உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு நாங்கள் தகுதி பெற்றுள்ளோம். இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி இந்த பட்டியல் தயாரிக்கப்படவில்லை. எனவே இந்த பட்டியலை ரத்து செய்ய வேண்டும். தகுதியானவர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ரத்து செய்ய தேவையில்லை

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

உதவி மருத்துவ அதிகாரி பணி நியமனத்தின் பொதுப்பிரிவின்கீழ் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைவிட சட்டவிரோதமாக எதுவும் இருக்க முடியாது. மனுதாரர்கள் இருவரும் தலா 71 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த பதவிக்கு தேர்வானவர்கள் பட்டியலை மறுசீரமைத்தால், ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டின்படி மனுதாரர்கள் இருவரும் 4, 5-வது இடத்தை பிடித்துவிடுவார்கள். இந்த பணிகளில் பொதுப்பிரிவின்கீழ் 12 பேரை நியமித்ததை ஏற்க முடியாது.

ஆனால் அவர்கள் தற்போது பணியாற்றிக்கொண்டு இருப்பதால், அவர்களை பணி நீக்கம் செய்வது தேவையற்றது. இதேபோல மின்வாரிய பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கில், அந்த வேலையில் நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய முடியாது (அதாவது தேர்வு பட்டியலை ரத்து செய்ய முடியாது). ஆனால் மனுதாரருக்கு 12 வாரத்தில் பணி வழங்க வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கிலும் அவரது தீர்ப்பை பின்பற்ற விரும்புகிறேன். எனவே சித்த மருத்துவப்பிரிவின் உதவி மருத்துவ அதிகாரியாக ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை ரத்து செய்யாமல், மனுதாரர்களுக்கு உரிய பணியை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story