அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது -எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது -எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் சென்னை வடபழனியில் பொதுக்கூட்டம்- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமை தாங்கினார்.

விழாவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

மின் கட்டண உயர்வு

தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டம் என ஏழைகளுக்கு கொடுக்கும் திட்டத்தை நிறுத்திய அரசாங்கம் இந்த தி.மு.க. அரசு. சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தினார்கள். 2-வது போனசாக மின்சார கட்டணத்தை 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தி உள்ளார்கள்.

மக்கள் தலையில் இடி விழுந்தது போன்று மிகப்பெரிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

வீழ்த்த முடியாது

எந்த தவறையும், ஊழலையும் விஞ்ஞான ரீதியாக மறைக்கும் சக்தி தி.மு.க.வுக்கு இருக்கிறது. மக்களுக்கு கிடைத்த பலன் வேதனையும், துன்பமும் தான்.

சுயநலவாதிகளை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை முடக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அ.தி.மு.க. தொண்டனை கூட உங்களால் தொட்டு பார்க்க முடியாது. உயிரோட்டமுள்ள, உழைப்பால் உயர்ந்த கட்சி இது. இதனை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்த நினைப்பவர்கள் கானல் நீரை போல கரைந்து போவார்கள்.

இடம் இல்லை

நான் முதல்-அமைச்சராக இருந்தபோது பல போராட்டங்களை சந்தித்தேன். பல போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தேன். ஆனால் தி.மு.க. ஆட்சியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, பல இடங்களில் அனுமதி கொடுக்கவில்லை.

அ.தி.மு.க.வுக்கு தொண்டன் தான் தலைமை தாங்குவான். கட்சியை வைத்து கொள்ளையடிக்க நினைப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story