பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது-ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என ராமநாதபுரத்தில் நேற்று நடந்த தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ராமநாதபுரம்,
தி.மு.க. தென்மண்டலத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று ராமநாதபுரம் பேராவூரில் நடந்தது.
30 ஆயிரம் பேர் பங்கேற்பு
தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்றார். தி.மு.க. எம்.பி, என்.ஆர்.இளங்கோவள், சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் முகவர்களுக்கு பயிற்சி அளித்து விரிவாக பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் 19 கட்சி மாவட்டங்களை சேர்ந்த 17 ஆயிரம் முகவர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பேசியதாவது:-
வீரம் மிகுந்த ராமநாதபுரம் மண்ணில் கழக வீரர்களாக கூடியுள்ளோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், தேச வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்கு மறைக்க முடியாதது.
தாய் மண்ணை காக்கும் பெரும் போரில் 12 வயதே ஆகி இருந்த மன்னர் ராமநாதசேதுபதி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபடி மக்களை எழுச்சி பெற வைத்தார். மன்னரின் கட்டளையை மனதில் வைத்து 42 நாட்கள் பெரும் போரை மக்கள் செய்தனர். சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனிமை சிறையில் அவரை பிரிட்டீஷ் அரசு அடைத்தது.
நாட்டுக்காக அவர் ஆற்றிய தியாகத்தை நினைவுகூர, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு சேதுபதி மன்னர் பெயரை வைத்தவர், தலைவர் கருணாநிதி.
எழுச்சியோடு ஏற்பாடு
தண்ணீர் இல்லாத காடு என்று சொல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த அடியேன் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தேன். சுப.தங்கவேலன் அமைச்சராக இருந்த போது நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
அண்ணா அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் சுனாமி குடியிருப்புகள், மேல்மட்ட பாலங்கள் என திட்டங்களை தந்தோம்.
பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. ராமநாதசுவாமி கோவிலின் தங்கத்தேரை ஓடவைத்தது இந்த ஆட்சிதான்.
தென்மண்டல முகவர் கூட்டம் என்றவுடன் ராமநாதபுரத்தில் நடத்தலாம் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மிகுந்த எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டி போட்டு இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றனர். எல்லாவிஷயத்திலும் போட்டிதான் என்பது உங்களுக்கும், அவர்களுக்கும் தெரியும். நம்மை உடன்பிறப்பாக அழைத்து குடும்பமாக்கிய தலைவர் கருணாநிதியின் கனவை நனவாக்க கூடியுள்ளோம்.
2 கோடி தொண்டர்கள்
தமிழகத்தை திராவிட முன்னேற்றக்கழகம்தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற அவரின் கனவை நிறைவேற்றுவோம். அதற்கான தளபதிகள்தான் நீங்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும், தமிழகம் முழுவதும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2 கோடி தொண்டர்களை கொண்ட தி.மு.க.வில், இன்று 68 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். திருச்சியில் டெல்டா மாவட்ட முகவர்கள் கூட்டம் நேரு தலைமையில் நடந்தது.
தற்போது ராமநாதபுரத்தில் 19 மாவட்டங்களை சேர்ந்த 16,928 பேர் கலந்து கொண்ட கூட்டம் நடந்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
வாக்காளர்களுக்கு முழுப்பொறுப்பு
தென்மாவட்ட பொறுப்பாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி தற்போது வழங்கப்பட்டது. இங்கு வழங்கப்படும் கொள்கை விளக்க செயல் பயிற்சி என்பது, இந்த தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களுக்கும் உங்களை செயல்பட வைக்க உதவும்.
நாடாளுமன்றத்துக்கான பல தேர்தல்களை சந்தித்து பிரதமரை தீர்மானித்துள்ளோம். குடியரசுத்தலைவரை தீர்மானித்து உள்ளோம். ஆட்சி மாற்றம் ஏற்பட அடித்தளம் அமைத்தோம். மீண்டும் ஒரு வரலாற்று களமாட உங்களை அழைக்கிறேன்.
வாக்குச்சாவடியின் முகவர்கள்தான் வாக்காளர்களுக்கு முழுப்பொறுப்பு. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு இன்று முதல் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களிடம் நமது சாதனைகளை தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும்.
விடியல் பயணம்
வாக்குச்சாவடிக்கு உள்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களாக நீங்கள் மாற வேண்டும். இதற்காக தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நம்மை யாரும் நிராகரிக்கமாட்டார்கள் என முழுமையாக நம்புகிறேன். ஏதாவது ஒரு விதத்தில் மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விடியல் பயணம் என பெண்களுக்கான இலவச பயணத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
நமக்கு எதிராக அவதூறு, பொய் பிரசாரம் செய்யும் சிறுநரிக்கூட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை
சமூக ஊடகங்கள் சிறப்பான பரப்புரை களமாக மாறியுள்ளது. எனவே, அனைவரும் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்க வேண்டும். அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க., பா.ஜ.க. செய்வதை போல பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். நமது சாதனைகளை மட்டும் சொன்னால் போதுமானது. நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி முழுமையாக வெற்றி பெற வேண்டும். தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க. நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டது. மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.
பதவிக்கு வரும் முன் மோடி பல வாக்குறுதிகளை கொடுத்தார். ராமநாதபுரத்திலும் கூட்டம் நடத்தி வாக்குறுதிகள் கொடுத்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி கருப்பு பணத்தை ஒழித்து ஆளுக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார்களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா?
இதில் ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட போகிறார் என்கின்றனர். ராமேசுவரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றுவோம் என்றார். பாதாள சாக்கடை பணிகளை தவிர எதுவும் நடக்கவில்லை. அதையும் அ.தி.மு.க. ஆட்சியில் முழுமையாக செய்யவில்லை.
புயலால் அழிந்து போன ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வருவோம் என்றார். இது வரை எதுவும் நடக்கவில்லை. மோடி சுட்ட பல வடைகளில் இந்த வடையும் ஒன்று.
மீனவர்கள் வாழ்வாதாரம்
மீனவர்களுக்கான வாக்குறுதியையாவது நிறைவேற்றினாரா? இலங்கை கடற்படையின் அராஜகத்தை போக்குவோம் என்றார். தற்போது அந்த நிலை மாறிவிட்டதா? தங்கச்சிமடம் மீனவர் கொலை, ராமேசுவரம் மீனவர் கொலைக்கு யார் பொறுப்பு? பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரத்தை வஞ்சித்துள்ளனர். நாளை (இன்று) நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் இது குறித்து விரிவாக பேசப்படும்.
மத்திய அமைச்சராக அருண்ஜெட்லி இருந்தபோது சொன்ன மதுரை எய்ம்ஸ் திட்டம் செங்கலுடன் நின்றுவிட்டது. 9 வருடங்கள் கழித்து தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர். இதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா? என்பது தெரியவில்லை.
மதுரை எய்ம்ஸ்
பல ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரியை தமிழகத்திடம் இருந்து பெறும் மத்திய அரசுக்கு தனது நிதியில் இருந்து, மதுரையில் எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு என்ன பேசினார் என்பதே தெரியாமல் வாட்ஸ்அப்பில் வந்த வெட்டி ஒட்டப்பட்ட தகவலை அப்படியே நாடாளுமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் பிரதமர் பேசியுள்ளார்.
திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தியபோது எம்.ஜி.ஆர். தி.மு.க.வில்தான் இருந்தார்.
"அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடைமையடா..." என்று வாய் அசைத்து பாடியவர் எம்.ஜி.ஆர். வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் வரலாறு என நம்புவது பிரதமருக்கு அழகல்ல.
சொந்த கட்சியில் ஆளில்லாததால் மாற்றுக்கட்சியினரை வைத்து தி.மு.க.வை விமர்சிக்கிறார். தலைவர் இல்லாமல் வெளியில் இருந்து கடன் வாங்கி கட்சி நடத்த வேண்டிய தேவை தி.மு.க.வுக்கு இல்லை.
மணிப்பூர் ஞாபகத்துக்கு வரவில்லை
இப்போதுதான் சகோதரி கனிமொழி கூறிய சிலப்பதிகாரத்தின் முன்னுரையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் படிக்க தொடங்கி இருப்பார் என்று தெரிகிறது. ஒன்றும் அவசரமில்லை. முழுமையாக படிக்க கால அவகாசம் உண்டு. மத்திய நிதி மந்திரியின் கணவர் எழுதிய புத்தகத்தை மத்திய மந்திரிகள் அனைவரும் படிக்க வேண்டும். அந்த புத்தகத்தில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப்பாற்ற முடியாது என கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சட்டமன்ற நாடகத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் மத்திய நிதி மந்திரி, மணிப்பூர் சம்பவத்துக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறார்?
ஒன்றரை மணி நேரம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமருக்கு மணிப்பூர் ஞாபகத்துக்கு வரவில்லை. ஓரிரு வரியில் மணிப்பூரை கடந்து சென்றார்.
தமிழகம் முன்னோடி
மக்கள் நலனில் அக்கறையில்லாத பிரதமர், உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடிமையாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமிதான்.
நாங்கள் மாநில கட்சி தான். ஆனால் அனைத்து மாநில மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். மக்கள் உரிமைகளை ஓங்கி ஒலித்து, நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நம்மை பின்பற்றி பிற மாநில எம்.பி.க்களும் தைரியமாக பேசுவது மத்திய அரசுக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. மக்களாட்சிக்கு தமிழகம் முன்னோடியாக இருந்து 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்.
இதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் அடக்குமுறைகளை பார்த்து பயப்படும் கட்சி தி.மு.க. அல்ல.. தேர்தல் வெற்றிக்கான களப்பணியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். உங்களை நம்பி நாடாளுமன்ற தேர்தல் களத்தை ஒப்படைத்துள்ளேன். உங்களது உழைப்புக்கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு என்று கலைஞரின் வழித்தோன்றலாக, உங்களில் ஒருவனாக நான் உறுதி கூறுகிறேன். நாற்பதும் நமதே. நாடும் நமதே. நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
----------------