தேசிய கல்விக்கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை மத்திய மந்திரி சுபாஷ்சர்கார் பேட்டி
தேசிய கல்விக்கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை என்றும், திருச்சியில் மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ்சர்கார் கூறினார்.
தேசிய கல்விக்கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை என்றும், திருச்சியில் மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ்சர்கார் கூறினார்.
இணை மந்திரி ஆய்வு
மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ்சர்க்கார் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருச்சிக்கு வந்திருந்தார். நேற்று காலை துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பூலாங்குடி காலனியில் உள்ள அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து திருச்சி புத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பா.ஜனதா கட்சியின் அலுவலக கட்டிடத்தை பார்வையிட்ட மத்திய இணை மந்திரி, அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக்கொள்கை
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. தமிழகத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் தமிழக அரசு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்திலும் அவை சிறப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது.
நாட்டில் எந்த மாநிலமும் புதிய தேசிய கல்வி கொள்கையை நேரடியாக எதிர்க்கவில்லை. அதே சமயம் அவைகுறித்த மாநில அரசின் கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர். புதிய கல்விக்கொள்கைப்படி புதிய பாடதிட்டத்தை மத்திய அரசு தயார் செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது.
துணைவேந்தர் நியமனம்
திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும். அதுதவிர திருச்சி கோட்டத்தில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள லிப்டுகள் பிப்ரவரி மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் உள்ள வழக்கமான நெறிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கவர்னர் தான் வேந்தர் என்பதால் அவருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு தேடுதல் குழு அமைத்து தேர்வு செய்பவர்களில் இருந்து துணைவேந்தரை கவர்னர் நியமிப்பார். இதில் அரசியல் கிடையாது.
நவோதயா பள்ளிகள்
அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை வைத்து இடம் ஒதுக்கி தந்தால் உடனடியாக தொடங்க மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை திருச்சியில் தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய இடம் ஒதுக்கி தந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் கடந்த 2 நாட்களாக திருச்சி பா.ஜ.க. நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக திருச்சி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. உறுதியாக வெற்றி பெறும்.
இவ்வாறு மத்திய இணை மந்திரி கூறினார்.