அ.தி.மு.க.வை யாரும் விமர்சித்து பேசக்கூடாது; தமிழக பா.ஜ.க.வினருக்கு ஜே.பி.நட்டா கண்டிப்பு


அ.தி.மு.க.வை யாரும் விமர்சித்து பேசக்கூடாது; தமிழக பா.ஜ.க.வினருக்கு ஜே.பி.நட்டா கண்டிப்பு
x

அ.தி.மு.க.வுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும். யாரும் விமர்சித்து பேசக்கூடாது என்று தமிழக பா.ஜ.க. வினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க.வில் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளராக இருந்த நிர்மல்குமார் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவரைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகினர்.

இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து கட்சி நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை விமர்சித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பா.ஜ.க.வினர் எரித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அ.தி.மு.க.- பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. 2 கட்சி தொண்டர்கள் இடையே மனக்கசப்பையும் உண்டாக்கியது. மேலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜே.பி. நட்டா கண்டிப்பு

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 10-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது அவர், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இந்தக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா, தமிழக பா.ஜ.க.நிர்வாகிகளுக்கு கண்டிப்பான சில அறிவுரைகள் வழங்கி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜே.பி. நட்டா வழங்கியுள்ள அறிவுரைகள் வருமாறு:-

அ.தி.மு.க.வுடன் நாம் சுமுக உறவை வைத்துக்கொள்ள வேண்டும். அ.தி. மு.க. தலைமை குறித்தோ, தொண்டர்களை பற்றியோ யாரும் எந்தவித குறையும் சொல்ல வேண்டாம். இதனை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பின்பற்றி நடக்கவேண்டும். இதனை யாரும் மீறி நடக்கக்கூடாது.

இவ்வாறு அவர் அறிவுரைகள் கூறி இருக்கிறார்.

ஜே.பி. நட்டாவின் இந்தப்பேச்சு மூலம் வருகிற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்பது உறுதியாகி உள்ளது.


Next Story