மறுநியமன போட்டித்தேர்வு கூடாது: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் மறுநியமன போட்டித்தேர்வு நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு மறுநியமன போட்டித்தேர்வு என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்யவேண்டும். சட்டமன்றத்தேர்தலில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்.
பணி நியமனங்களை மேற்கொள்ளும்போது வயதை கருத்தில்கொண்டு தற்போதுள்ள வயது வரம்பை தளர்த்தி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக்கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பாசார் புகழேந்தி, தலைவர் ஏழுமலை, செயலாளர் கபிலன் சின்னசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் மின்னல் வே.ரவி, துணைத்தலைவர் வடிவேலன், துணைச்செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரசாணை 149-ஐ ரத்து செய்யவேண்டும்
உண்ணாவிரதப்போராட்டம் குறித்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக்கூட்டமைப்பு மாநிலச்செயலாளர் கபிலன் சின்னசாமி கூறியதாவது:-
அரசாணை 149-ஐ ரத்து செய்யவேண்டும். எங்களுக்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்பது உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் உண்ணாவிரதம், கவனஈர்ப்பு, மனு கொடுத்தல், முற்றுகை என 9 முறை போராட்டக்களத்தில் இறங்கி இருக்கிறோம்.
ஆனால் அரசிடம் இருந்து எந்தப்பதிலும் வரவில்லை. இப்போது 10-வது முறையாக வீதியில் இறங்கி போராடுகிறோம். அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். தொடர்ந்து கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தாதபட்சத்தில் அடுத்தக்கட்டமாக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் செல்போனில் பேச்சு
போராட்டத்துக்கு இடையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது இடைத்தேர்தல் முடிந்த பிறகு, கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்திருப்பதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததாக, கூட்டமைப்பின் மாநிலச்செயலாளர் கபிலன் சின்னசாமி கூறினார்.