பாலப்பணிகள் காரணமாக கல்லணை கால்வாயில் திறக்கப்படாத தண்ணீர்


பாலப்பணிகள் காரணமாக கல்லணை கால்வாயில் திறக்கப்படாத தண்ணீர்
x

தஞ்சை கல்லணை கால்வாயில் பாலப்பணிகள் காரணமாக தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 12 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் விவசாயிகள் நாற்று விடாமல் தண்ணீர் திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை கல்லணை கால்வாயில் பாலப்பணிகள் காரணமாக தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 12 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் விவசாயிகள் நாற்று விடாமல் தண்ணீர் திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

கல்லணை கால்வாய்

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணை முன்கூட்டியே அதாவது மே மாதம் 24-ந் தேதி திறக்கப்பட்டது. அங்கிருந்து தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந் தேதி மாலை டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் மட்டுமே தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

சீரமைப்பு பணிகள்

கல்லணை கால்வாயில் கல்லணை தலைப்பில் இருந்து தொடங்கி மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இது தவிர பல்வேறு இடங்களில் பாலப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி கான்கிரீட் போடும் பணிகள் நடப்பதால், ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் கல்லணை கால்வாய் பாசனம் மூலமாக சாகுபடி செய்யும் விவசாயிகளால் சாகுபடி பணிகளை தொடங்க முடியவில்லை. வழக்கமாக ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டவுடன் நெல் நாற்று விட்டு நடவு மேற்கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால் கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் நாற்று விடுவதற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏரி-குளங்கள்

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 12 நாட்கள் ஆகிறது. கல்லணை திறக்கப்பட்டு 9 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் கல்லணை கால்வாயில் இன்னும் தண்ணீர் வராததால் நாற்றங்கால் தயாரிப்பு பணிகளை விவசாயிகள் தொடங்கவில்லை.

கல்லணை கால்வாய் செல்லும் பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 694 ஏரி, குளங்கள் உள்ளன. இந்த கால்வாய் தண்ணீரை கொண்டு தான் ஏரி, குளங்களும் நிரப்பப்படும்.

முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. கல்லணை கால்வாயில் எப்போது தண்ணீர் திறக்கப்படும் என தெரியாத நிலையில் விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்காமல் உள்ளனர்.

தண்ணீர் திறக்க வேண்டும்

எனவே கல்லணை கால்வாயில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அப்போதுதான் விவசாய பணிகளை உடனடியாக தொடங்க முடியும். கல்லணை கல்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதோடு, கடைமடை பகுதி வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Next Story