திருநகரில் 30 நாட்கள் தண்ணீர் வினியோகம் இல்லை:குடிநீர் நீரேற்று நிலையத்தில் கமிஷனர் திடீர் ஆய்வு
திருநகரில் குழாய் உடைப்பும், மின்மோட்டார் பழுதானதால் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் திடீரென்று குடிநீர் நீரேற்று நிலையத்தை நேரடியாக சோதனை செய்தார்.
திருப்பரங்குன்றம்,
திருநகரில் குழாய் உடைப்பும், மின்மோட்டார் பழுதானதால் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் திடீரென்று குடிநீர் நீரேற்று நிலையத்தை நேரடியாக சோதனை செய்தார்.
குழாய்கள்உடைப்பு
மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் 94-வது வார்டாக திருநகர் அமைந்துள்ளது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் இந்த பகுதிக்கு மேலக்காலில் இருந்து வைகை தண்ணீரும், திருநகர் டீச்சர் காலனி மொட்டமலையில் அமைந்துள்ள காவிரி நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீரும் மேல்நிலை நீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு அதை ஒருநாள் விட்டு ஒருநாள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முல்லைபெரியாறு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பள்ளங்கள் தோண்டியதில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வந்தது. அதை மாநகராட்சி குடிநீர் பிரிவு ஊழியர்கள் சரி செய்து வந்தனர்.
தினத்தந்தி செய்தி எதிரொலி
இந்த நிலையில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து திருநகர் 6-வது பஸ் நிறுத்தம் அருகிலும், ராதாகிருஷ்ணன் தெருக்கள் உள்ளிட்ட சில தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு ரோடுகளில் தண்ணீர் வீணாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குடிநீரேற்று நிலையத்தில் பழுதான மின் மோட்டார் சரிசெய்யப்படாத நிலை இருந்து வந்தது.
இதனால் குடிநீர் வினியோகம் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இது தொடர்பாக தினத்தந்தியில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக முல்லைப் பெரியாறு குடிநீர் பிரிவு ஊழியர்கள், மதுரை மாநகராட்சி குடிநீர் வினியோகப் பிரிவு ஊழியர்கள் சேர்ந்து உடைப்புகளை சரி செய்தனர்.
கமிஷனர் சோதனை
இந்த நிலையில் பழுதானமின் மோட்டாரை சரி செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங், திருநகருக்கு நேரடியாக வந்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டபகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் காவிரி நீரேற்று நிலையத்திற்கு சென்று தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை சோதனை செய்தார். மேலும் அவர் குடிநீர் சப்ளைஅளவீடும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா.? குடிநீர் சப்ளை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
இந்த திடீர் சோதனை அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வில் மதுரை மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவிசெயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் இருந்தனர்.