பெயரளவில் செயல்படும் உழவர் சந்தைகள்; மேம்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்


பெயரளவில் செயல்படும் உழவர் சந்தைகள்; மேம்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
x

தேனி மாவட்டத்தில் பெயரளவில் செயல்படும் உழவர் சந்தைகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி

சிறு, குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் கடந்த 1999-ம் ஆண்டு அரசு சார்பில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், தேவாரம் ஆகிய 7 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன. தேனியில் உள்ள உழவர் சந்தையில் 72 கடைகள், கம்பத்தில் 98 கடைகள், பெரியகுளத்தில் 10 கடைகள், போடியில் 12 கடைகள், ஆண்டிப்பட்டியில் 11 கடைகள், சின்னமனூரில் 23 கடைகள், தேவாரத்தில் 11 கடைகள் அமைந்துள்ளன.

பெயரளவில் செயல்பாடு

தேனி உழவர் சந்தைக்கு தினமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மக்கள் வந்து காய்கறி, பழங்கள் வாங்கிச் செல்கின்றனர். தினமும் சராசரியாக 35 முதல் 40 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தேனி மற்றும் கம்பம் உழவர் சந்தை அதிக விவசாயிகளுடன் செயல்படுவதோடு, மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

அதே நேரத்தில் மாவட்டத்தில் பிற இடங்களில் உள்ள உழவர் சந்தைகள் பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. பெரியகுளத்தில் நகரில் இருந்து சற்று தொலைவில் அழகர்சாமிபுரம் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. அங்கு அனுமதி பெற்றதை விடவும் குறைவான எண்ணிக்கையில் தான் விவசாயிகள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பெரியகுளத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் நகருக்குள் செயல்படுவதால் மக்கள் உழவர் சந்தைக்கு வந்து செல்ல ஆர்வமின்றி உள்ளனர். இதனால் உழவர் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு கடைகள் அமைக்கும் விவசாயிகளும் குறைவான நேரமே வியாபாரம் செய்துவிட்டு புறப்பட்டுச் செல்கின்றனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு

அதே நிலைமை தான் போடி, தேவாரம் உழவர் சந்தைகளிலும் உள்ளது. போடி, தேவாரத்தில் ஓரிரு விவசாயிகள் மட்டுமே உழவர் சந்தையில் கடை அமைக்கின்றனர். இதனால், பொரும்பாலான நாட்களில் காலை 10 மணிக்குள் உழவர் சந்தை மூடப்படுகிறது.

தேனி உழவர் சந்தையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வரை குடிநீர் பிரச்சினை, மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறும் தரைப்பகுதி, காய்கறிகளை வைக்கும் குளிர்பதன அறை உள்பட பல்வேறு பிரச்சினைகள், கோரிக்கைகள் இருந்தன.

இந்தநிலையில் தமிழக அரசு நிதி ஒதுக்கியதை தொடர்ந்து தேனி உழவர் சந்தையில் இருந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. தரையில் கடைகள் அமைத்து இருந்த விவசாயிகளுக்காக மேற்கூரை அமைக்கப்பட்டது. தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதோடு, தரையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு, 2 டன் காய்கறிகள் வைக்கும் அளவிலான குளிர்பதன அறையும் சீரமைக்கப்பட்டது. இது அங்கு கடைகள் அமைத்து இருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

அதேநேரத்தில் மாவட்டத்தில் பிற இடங்களில் உள்ள உழவர் சந்தைகள் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையுடனும், முறையான பராமரிப்பு ஏதுமின்றியும் உள்ளன. இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

பராமரிப்பு பணி

சோலைராஜா (தேனி உழவர் சந்தையில் கடைநடத்தும் விவசாயி):- தேனி உழவர் சந்தையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடை வைத்துள்ளேன். இங்கு ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பழுது ஏற்பட்டு தண்ணீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. பராமரிப்பு குறைபாடு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதோடு, சந்தையும் பராமரித்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இது கடைகள் அமைத்துள்ள விவசாயிகளுக்கும், வந்து செல்லும் மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோன்று சிறப்புடன் உழவர் சந்தையை பராமரிக்க வேண்டும்.

கண்ணன் (காய்கறி வியாபாரி, கம்பம் உழவர் சந்தை):- உழவர் சந்தை திட்டம் விவசாயிகளுக்கான அற்புதமான திட்டம். இந்த திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையிலும், மக்களுக்கு குறைந்த விலையிலும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. கம்பம் உழவர் சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த மக்கள், வியாபாரிகள் பலர் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். மாவட்டத்தில் அதிக அளவில் நுகர்வோர் வந்து செல்லும் உழவர் சந்தையாக இது திகழ்கிறது. தினமும் 40 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் ஒருமுறை விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. காலை நேரத்தில் மட்டும் உழவர் சந்தை செயல்பட்டு வந்த நிலையில், தற்போது செக்கு எண்ணெய், சிறுதானியம், நாட்டுக்கோழி முட்டை போன்றவை விற்பனை செய்யும் வகையில் மாலை வரை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

அடிப்படை வசதிகள்

திருநாவுக்கரசு (விவசாயி, பெரியகுளம்):- பெரியகுளம் உழவர் சந்தை, நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. நகரில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இதனால், மக்கள் தினசரி மார்க்கெட்டுக்கு செல்கின்றனர். உழவர் சந்தைக்கு மக்கள் செல்வது குறைவாகவே உள்ளது. இதனால், உழவர் சந்தை பெயரளவில் செயல்படுகிறது. உழவர் சந்தையை நகரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் அமைத்து இருக்கலாம். உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் வந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகர் பகுதிக்குள் அதிக எண்ணிக்கையில் கடைகளுடன் உழவர் சந்தை அமைத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மேம்படுத்த நடவடிக்கை

பால்ராஜ் (வேளாண் விற்பனை வணிகத்துறை துணை இயக்குனர், தேனி):- தமிழக அரசு உத்தரவுப்படி உழவர் சந்தைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேனி உழவர் சந்தை மேம்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கம்பம் உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சந்தையை மேம்படுத்தப்பட உள்ளது. தேவாரம் சுற்றுவட்டார பகுதிகள் விவசாய பகுதிகள் என்பதால் அங்கு உழவர் சந்தைக்கு மக்கள் வருவது குறைவாக உள்ளது. பெரியகுளம் உள்ளிட்ட பிற இடங்களிலும் அனுமதி பெற்ற எண்ணிக்கையை விட குறைவான விவசாயிகள் தான் கடைகள் அமைக்கின்றனர். இதை இன்னும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக பிற உழவர் சந்தைகளும் மேம்படுத்தப்படும். உத்தமபாளையத்தில் உழவர் சந்தை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அரசு அனுமதி கொடுத்தவுடன் அங்கும் புதிதாக உழவர் சந்தை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story