செயல்படாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள்
நன்னிலம் அருகே வண்டாம்பாளை ஊராட்சியில் செயல்படாமல் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே வண்டாம்பாளை ஊராட்சியில் செயல்படாமல் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது வண்டாம்பாளை ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்காக கடந்த ஆண்டு வண்டாம்பாளை மெயின் ரோட்டில் ரூ.9 லட்சம் செலவிலும், மாரியம்மன் கோவில் தெருவில் ரூ. 7 லட்சம் செலவிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
செயல்படாமல் உள்ளது
இந்த நிலையத்தில் உள்ள எந்திரத்தில் ஒருரூபாய் செலுத்தி விட்டு பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிடித்து செல்லலாம் என்ற திட்டத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஓரிரு நாட்கள் மட்டுமே செயல்பட்டுள்ளது. தற்போது 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களும் செயல்படாமல் பராமரிப்பின்றி கிடக்கிறது. மக்களின் வரிப்பணம் இதுபோன்று வீணாவது வேதனை அளிப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படாமல் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை
இதுகுறித்து வண்டாம்பாளையைச் சேர்ந்த ராஜாராமன் கூறுகையில், எங்கள் கிராமத்தில் மக்களின் பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக் கப்பட்டது.இதனால் பொதுமக்கள் நல்ல குடிநீர் கிடைக்கும் என மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரிரு நாட்களிலேயே முடியும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் செயல்படாமல் போனது. செயல்படாமல் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அந்த பகுதி மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என்றார்.