கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.
அப்போது விவசாயிகள் தனியார் மூலம் நெல்கொள்முதல் செய்வதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கயிறை கையில் வைத்து கொண்டு, நெல்லிற்கு பதிலாக சாப்பாட்டினை தரையில் வைத்தும் போராட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், 2021-ம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு மையத்தில் நாள் ஒன்றுக்கு 80 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது தனியார் மூலம் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மையத்தில் நாள் ஒன்றுக்கு 20 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் பணபட்டுவாடா செய்ய 50 நாட்கள் வரை ஆகிறது.
நெல் கொள்முதல் செய்யும் பதிவில் முறைகேடு நடக்கிறது. எனவே நெல் சேமிப்பு கிடக்கு கட்டிடம் தொகுதிக்கு ஒன்று கட்ட நிதி ஒதுக்கி நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.
இதில் விவசாயிகள் ஜெ.சிவா, ரமேஷ், பாண்டிதுரை, காசி, அய்யாயிரம், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.