2 வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய பட்டன் பேட்டரி அறுவை சிகிச்சையின்றி அகற்றம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய பட்டன் பேட்டரி அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய பட்டன் பேட்டரி அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
2 வயது சிறுவன்
தண்டராம்பட்டு தாலுகா ரெட்டியார் பாளையம் மேல்கப்பலூர் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன், விவசாயி. இவருக்கு 2 வயதில் லித்திக்சரண் என்ற மகன் உள்ளார்.
கடந்த 21-ந் தேதி மாலையில் லித்திக்சரண் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த வட்ட வடிவிலான பட்டன் பேட்டரியை விழுங்கி உள்ளான். பின்னர் துரைமுருகன் பட்டன் பேட்டரியை தேடிய போது லித்திக்சரண் அதனை விழுங்கியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக சிறுவனை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.
சிறுவனை எக்ஸ்ரே செய்து பார்த்ததில் தொண்டையில் உணவுக்குழாய்க்கும், மூச்சுக்குழாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பட்டன் பேட்டரி சிக்கி இருந்தது தெரியவந்தது.
அறுவை சிகிச்சையின்றி அகற்றம்
இதையடுத்து காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் இழஞ்செழியன் தலைமையில் டாக்டர் கமலக்கண்ணன், மயக்கவியல் துறைத்தலைவர் பாலமுருகன், மயக்கவியல் நிபுணர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவக்குழுவினர் சிறுவனின் தொண்டையில் சிக்கிய பட்டன் பேட்டரியை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சிறுவனுக்கு மயக்க மருந்து அளித்து அறுவை சிகிச்சையின்றி லாரிங்கோஸ்கோபி முறையில் பட்டன்பேட்டரியை அகற்றினர்.
தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ளார்.
துரிதமாக நடவடிக்கை எடுத்து சிறுவனின் தொண்டையில் சிக்கிய பட்டன் பேட்டரியை அகற்றிய மருத்துவக்குழுவினருக்கு மருத்துவக்கல்லூரி டீன் திருமால்பாபு உள்பட டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.