ஊட்டியில் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஊட்டியில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஊட்டியில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை வழக்கத்தை விட 100 சதவீதத்திற்கும் அதிகமாக பெய்து உள்ளது. இந்த மழை காரணமாக இதுவரை கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் வருகிற 28-ந் தேதி வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும் ஊட்டியில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். அதாவது அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகிறது. காற்றில் ஈரப்பதம் 78 சதவீதம் உள்ளது.

குளிரில் இருந்து தப்பிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பளி ஆடைகளை அணிகின்றனர். மேலும் ஆங்காங்கு நெருப்பு மூட்டி அதில் குளிர் காய்கின்றனர். இதற்கிடையே ஏற்கனவே மழையால் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்த பொதுமக்கள் மீண்டும் மழையா என அச்சமடைந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை பாதிப்புகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

பரவலாக மழை

பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி எருமாடு, சேரம்பாடி, உள்பட தாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி, விலக்கலாடி, சோலாடி, ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைஓரங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மின்கம்பிகள் மேல் மரங்கள் சாய்ந்து மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. பந்தலூர் எம்.ஜி.ஆர்.நகர் நத்தம் பகுதியில் ஒரு கொட்டகை உள்பட பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தது. இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய துறையினர் அங்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


Next Story