தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புமண்சுவர் இடிந்து கட்டிட மேஸ்திரி பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையினால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக திருவண்ணாமலை அருகில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட மேஸ்திரி ஒருவர் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையினால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக திருவண்ணாமலை அருகில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட மேஸ்திரி ஒருவர் பலியானார்.
தொடர் மழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து அவ்வபோது மிதமான மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலானக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து தொடர் மழை பெய்து வருகின்றது. பகலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழையின் காரணத்தினால் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் துறையில் பணியில் வேலை செய்பவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் வேலைக்கு சென்றனர். மேலும் சாலையில் இருச்சக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்கள் கையில் குடை பிடித்த படியும், ரெயின் கோட் அணிந்த படியும் சென்றனர். இந்த தொடர் மழையினால் அத்தியாவசிய தேவைக்காக கூட பொதுமக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.
கட்டிட மேஸ்திரி பலி
திருவண்ணாமலை அருகில் உள்ள கீழ்படூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 50), கட்டிட மேஸ்திரி. இவர் அந்த பகுதியில் உள்ள அவரது நிலத்திற்கு நேற்று காலை சுமார் 6 மணியளவில் சென்று உள்ளார். அப்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் அவர் நிலத்தில் உள்ள வீட்டின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக வீட்டின் ஒரு பக்க மண் சுவர் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசி மற்றும் தெள்ளார், நடுகுப்பம், வங்காரம் வெண்குன்றம், மும்முனி, கீழ்கொடுங்காலூர், கீழ்குலைவேடு, மழையூர், சென்னாவரம், பிருதூர், மருதாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றன இந்த நிலையில் வந்தவாசி பஜார் சாலை அச்சரப்பாக்கம் சாலை காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வந்தவாசி பகுதியில் இரவு முழுவதும் பெய்த மழையின் அளவு 25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.