வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை
பாளையங்கோட்டையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி கலையரங்கில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் கணேசன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தீயணைப்புத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீயணைப்பு துறையினரால் பிளாஸ்டிக் குடம், தேங்காய் மட்டை, எல்.பி.ஜி, சிலிண்டர், வாட்டர் கேன், மரக்கட்டைகள், தெர்மாகோல் போன்றவற்றின் மூலம் தப்பித்தல் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எனவே அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பயன்படுத்தி வருகின்ற வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா, உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு துறையினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.