திரும்பும் பக்கமெல்லாம் வடமாநில தொழிலாளர்கள்


திரும்பும் பக்கமெல்லாம் வடமாநில தொழிலாளர்கள்
x
திருப்பூர்


காங்கயத்தில் வாரச்சந்தை நடைபெறும் நாளில் திரும்பும் பக்கம் எல்லாம் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.

வார சந்தை

காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும். இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. சந்தை நடைபெறும் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.

இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை விவசாய தொழிலார்கள், தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலார்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. காங்கயம் வார சந்தையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காங்கயம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் கூட்டம் மட்டுமே அதிகளவில் இருந்து வந்தது. கடந்த சில வருடங்களாக சந்தையில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வார சந்தை செயல்படும் நாளான திங்கட்கிழமைகளில் எங்கு பார்த்தாலும் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள்.

கடைகள்

குறிப்பாக வார சந்தை வளாகம், செல்போன் கடைகள், மளிகை கடைகள், ஆன்லைன் பண பரிவர்த்தனை கடைகள், ஏ.டி.எம், இறைச்சிக்கடைகள், மீன்கடைகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் சந்தை நாட்களில் காங்கயம் பஸ் நிலைய சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் வடமாநில தொழிலாளர்களால் படு ஜோராக நடைபெறும். மேலும் ஆட்டோக்களின் சவாரிக்கும் பஞ்சம் இல்லை. திங்கட்கிழமை நாட்களில் கடைவீதி பகுதிகளுக்கு வந்தால் வடமாநில பகுதிகளில் உள்ள கடைவீதிக்கு வந்ததுபோல் அனுபவம் ஏற்படும்.

தேங்காய் களம், அரிசி ஆலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் சுத்தம் செய்யும் வேலைகளை வடமாநில தொழிலாளர்கள் செய்கிறார்கள்.

மேலும் வருபவர்கள் வேலை செய்யும் இடங்களிலேயே தங்கி வேலை செய்வதால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். சம்பளத்தை பெரும்பாலும் உணவிற்காகவும், இதர செலவுகளுக்காகவும் செய்கிறார்கள். மீதம் இருக்கும் பணத்தை உறவினர்கள் மற்றும் குடும்பத்திற்கு பணத்தை அனுப்பி விடுவதாக தெரிவிக்கின்றனர்.

முக்கியத்துவம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சந்தைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் 5 அல்லது 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குழுவாகவும், குடும்பமாகவும் வந்து காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் வாங்கி செல்வர். உள்ளூர் மக்கள் காய்கறிகள் அரை கிலோ முதல் 1 கிலோ வரை வாங்குவோம். அதுவே வடமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான 5 கிலோ முதல் 10 கிலோ வரை காய்கறிகளை மூட்டை மூட்டையாக வாங்கி செல்வார்கள். குறிப்பாக உருளை கிழங்குகளை 2 மடங்காக வாங்கிச் செல்வர். மேலும் மீன் மற்றும் கோழிகளை விரும்பி வாங்கிச் செல்வர். இதனால் வியாபாரிகள் உள்ளூர் மக்களை காட்டிலும் வடமாநில தொழிலாளர்களின் வியாபாரத்திற்க்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இதனால் சந்தையில் 80 சதவீத வியாபாரிகள் வடமாநில தொழிலாளர்களின் வியாபாரத்தை கையாளும் அளவிற்கு இந்தி கற்று வைத்துள்ளார்கள். விலை முதல் காய்கறிகள் மற்றும் பழங்களின் பெயர்களை முழுமையாக இந்தியில் கற்று வைத்துள்ளார்கள். இதுதவிர மளிகை, செல்போன், பணப்பரிவர்த்தனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்யும் அளவிற்கு இந்தி பேசுகின்றனர்.

மேலும் டவுன் பஸ்களில் பயணிக்கும் வடமாநில தொழிலாளர்கள் வாயில் பாக்குகளை போட்டு மென்று வருவதால் பஸ்களில் குடலை புடுங்கும் அளவிற்கு வாசனை வரும். இன்னும் இதே நிலைமை நீடித்தால் வரும் நாட்களில் காங்கயம் வார சந்தையில் உள்ளூர் மக்களை காட்டிலும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையே அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே அவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story